தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, இதுவரை ரூ.151 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து மாநிலம் முழுவதும் பறக்கும் படையினரால் தீவிரச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.151 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மேலும், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக ‘சி-விஜில்’ செயலி மூலம் இதுவரை 794 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் 20 புகார்கள் தற்போது பரிசீலனையில் உள்ளன; எஞ்சிய அனைத்துப் புகார்கள் மீதும் உடனடி விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களில், 50 சதவீதம் பேருக்குத் தபால் மூலமாக அடையாள அட்டைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன. விடுபட்ட மற்றவர்களுக்கும் தேர்தல் வாக்குப்பதிவு முடிவதற்குள் அடையாள அட்டைகள் சென்றடைவதை உறுதி செய்யப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதற்கான விநியோகப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் மாநிலம் முழுவதும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளைக் கண்டறியும் பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிந்தவுடன் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அதேபோல், கடந்த தேர்தல்களை விட இந்த முறை வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.






