சென்னை: திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.2021-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு திமுகவினுடைய ஆட்சியில் தமிழ்நாடு கஞ்சா, கள்ளச் சாராயம், போதைப் பொருள் மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் தெருக்களில் கஞ்சா புழக்கம் இல்லாத இடமே இல்லை என்கிற நிலையை இந்த அரசு உருவாக்கி இருக்கிறது. வேதனையோடு சொல்வதென்றால், கல்லூரி மாணவர்களும், மாணவிகளும், பள்ளிக்கூட மாணவ, மாணவிகள்கூட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை மிகச் சாதாரணமாக பயன்படுத்துகிற செய்திகளும், காட்சிகளும் நாட்டின் முக்கிய ஊடகங்களிலேயே வெளியிடப்பட்டு வருகிறது.சட்டம் – ஒழுங்கு சந்தி சிரித்த நேரத்திலும் காவல் துறையை கையில் வைத்திருக்கின்ற தமிழ்நாட்டின் முதலமைச்சர் கள்ள மவுனம் சாதித்ததோடு இல்லாமல் விளம்பர ஆட்சிக்கான போட்டோ ஷூட்களை நடத்திக் கொண்டிருந்தார். போதை கும்பல், கூலிப் படைகள் ஏற்படுத்திய சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளில் உச்சமாக, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான, வரலாற்றில் முன் எப்போதும் பார்த்திடாத அளவிற்கு மிகக் கொடூரமான பாலியல் கொடுமைகளும், கொலைகளும் அரங்கேற்றப்படுகின்றன.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 30 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 4 பட்டியலின இளைஞர்கள் லாக்கப்பில் மரணமடைந்துள்ளனர். இதிலிருந்து, தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எதைநோக்கிச் செல்கிறது என்பதையும்; வேலியே பயிரை மேய்கிறது என்பதையும் மக்கள் தெளிவாக உணர்ந்து மிகுந்த வேதனைப்படுகின்றனர்.
இந்த முதலமைச்சரின் நிர்வாகத் திறமையற்ற, மக்கள் விரோத ஆட்சியைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு மக்கள் பெரும் கோபம் கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சியின் மேற்கண்ட மக்கள் விரோதச் செயல்களின் வெளிப்பாடுதான், ஆளும் கட்சிக்காரர்களை மக்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தியும், வெளியேறச் சொல்லி முழக்கமிட்டும் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.எனவே, இந்த கொடூர ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களுடைய முகத்திரைகளை கிழிக்கும் வண்ணமும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெருந்திரளாக மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கிறது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் அனைத்து மக்களும் அலை அலையாகத் திரண்டு வந்து பேராதரவினைத் தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.அதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை கே.கே. நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர், பாஜகவினர், பாமகவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், விலைவாசி உயர்வு போன்றவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.





