மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், சுமார் 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் இரு பிரம்மாண்ட சரக்குக் கப்பல்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளன. பிப்.28 அன்று மோதல் தொடங்கிய பிறகு, ஈரான் அல்லாத மற்ற நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் இந்த பகுதியைக் கடந்து வருவது இதுவே முதல் முறையாகும். லைபீரியா நாட்டின் கொடியுடன் வந்த இந்தக் கப்பல், சவுதி அரேபியாவிலிருந்து சுமார் 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உடன் புதன்கிழமை மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்திய கொடியுடன் வந்த இந்த பிரம்மாண்ட கப்பல், ஈராக்கிலிருந்து சுமார் 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் மும்பை வந்தது. இது தற்போது ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது (பாதுகாப்பு காரணங்களுக்காக இதன் பெயர் வெளியிடப்படவில்லை).
கப்பல் கண்காணிப்பு தரவுகளின்படி, இந்த இரு கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும்போது தங்களைக் காட்டித் தரும் ‘Automatic Identification System (AIS)’ எனப்படும் தானியங்கி அடையாள அமைப்பை அணைத்துவிட்டு (“going dark”) ரகசியமாகப் பயணித்துள்ளன. அந்த ஆபத்தான பகுதியைத் தாண்டிய பிறகே மீண்டும் அந்தத் தொடர்பை ஆன் செய்துள்ளன. ஈரான் தற்போது தனது நாட்டு எண்ணெய் கப்பல்கள் (சீனாவுக்குச் செல்பவை) மட்டுமே அனுமதிக்கிறது.மற்ற நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் சர்வதேசளவில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் மற்றும் டீசல் இருப்பு சுமார் 8 வாரங்களுக்குப் போதுமானதாக இருந்தாலும், எல்.பி.ஜி (சமையல் எரிவாயு) விநியோகத்தில் சிக்கல் நீடிக்கிறது. இந்தியாவின் மொத்த எல்.பி.ஜி தேவையில் 60% இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் 90% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் வர வேண்டும். தற்போது போர்ச் சூழலால் சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் துறை பயன்பாட்டிற்கான எரிவாயு நிறுத்தப்பட்டு, முழுமையாக வீடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தற்போது எண்ணெய் கப்பல் வரத் தொடங்கியுள்ளதால், பாரசீக வளைகுடாவில் சிக்கியுள்ள எல்.பி.ஜி. கப்பல்களும் விரைவில் இந்தியா வந்து சேரும் என்ற நம்பிக்கை எழுந்து உள்ளது.








