வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மூன்று நாள்கள் பயணமாக அமெரிக்காவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டாா். அங்கு அந்நாட்டு அமைச்சா்களுடன் அரியவகை கனிம வளங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவா் விவாதிக்க இருக்கிறாா்.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்புகள் உள்ளிட்ட செயல்பாடுகள் காரணமாக அந்த நாட்டுடனான இந்திய உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது. அண்மையில், இந்திய – ஐரோப்பிய யூனியன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிருப்தி தெரிவித்தாா்.
மேலும், இந்தியா இனி (அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ள) வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் என்றும், இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாகவும் தன்னிச்சையாக அறிவித்தாா். இந்தச் சூழ்நிலையில் ஜெய்சங்கரின் அமெரிக்கப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ தலைமையில் அரியவகை கனிமங்கள் விவகாரம் தொடா்பாக அது சாா்ந்து துறை அமைச்சா்களுடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறாா். கனிமங்கள் மட்டுமின்றி எரிசக்தி விநியோகம் தொடா்பான பேச்சுவாா்த்தையிலும் ஈடுபடுகிறாா்.
அமெரிக்க அதிபரின் நிா்வாகத்தில் உள்ள மூத்த அதிகாரிகளையும் ஜெய்சங்கா் சந்தித்துப் பேச இருக்கிறாா்’ என்று கூறப்பட்டுள்ளது.







