அனைத்து பள்ளிகளிலும் இலவச சானிட்டரி நேப்கின்..!

அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நேப்கின்களை இலவசமாக வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாதவிடாய் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை, நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்கூர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அமர்வு தீர்ப்பு அளித்தது. “பீரியட் என்பது ஒரு வாக்கியத்தின் முடிவாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு பெண்ணின் கல்வியின் முடிவாக அல்ல” எனும் வாக்கியத்துடன் நீதிபதிகள் தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தனர்.

அமெரிக்காவில் Period என்ற வார்த்தை Full stop என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. மாதவிடாய் என்பது ரகசியமாக முணுமுணுக்கப்பட வேண்டிய ஒரு தலைப்பாக இருக்கக் கூடாது என்றும், வெட்கப்படவேண்டிய விஷயமல்ல எனவும் தெரிவித்த நீதிபதிகள், அரசியல் சாசன பிரிவு 21இன்படி மாதவிடாய் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று என்று கூறினர்.

மாதவிடாய் குறித்து புரிதல் இல்லாத மாணவன், கேலி செய்யும்போது, அந்த மாணவி பள்ளிக்கு செல்வதையே தவிர்க்க தூண்டும் எனவும் குறிப்பிட்டனர். இதனால் பெண்களின் மாதவிடாய் குறித்து மாணவர்களுக்கு அறிவியல் பூர்வமாக கற்றுத்தர வேண்டும் என்றும், இது குறித்த விழிப்புணர்வு கட்டாயம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நேப்கின்களை இலவசமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் அறிவுறுத்தினர்.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் தண்ணீர் வசதியுடன் தனித் தனியே சுகாதாரமான கழிவறைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மக்கும் தன்மை கொண்ட ASDM-694 ரகத்தை சேர்ந்த தரமான சானிட்டரி நேப்கின்களை மாணவிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் எனவும் மாதவிடாய் கால அவசரத்திற்கு தேவையான கூடுதல் உள்ளாடைகள், கூடுதல் சீருடை, நேப்கின்கள் உள்ளிட்டவற்றை மாணவிகள் வைத்துக்கொள்ள தனி இடம் ஒதுக்கி தர வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

உத்தரவுகளைப் பின்பற்றாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம் என்றும், மாநில அரசுகள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. வழிகாட்டு நெறிமுறைகளை 3 மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும், அதற்கான நிலை அறிக்கையை மாநில அரசுகள், 3 மாதத்தின் முடிவில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.