மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து அவரது மனைவி சுனேத்ரா பவார் கணவர் அஜித் பவாருக்கு பதில் இன்று மாலை 5 மணிக்கு மகாராஷ்டிரா துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.சுனேத்ரா பவார் தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ள நிலையில் அடுத்த 6 மாதத்தில் அஜித் பவார் வென்ற பாரமதி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் களமிறங்கி போட்டியிட்டு எம்எல்ஏ ஆகவும் திட்டமிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்பட இன்னும் சில சிறிய கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணியின் பெயர் ‘மகாயுதி’.
இந்த கூட்டணியில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாகவும் பதவி வகித்து வந்தனர். இந்நிலையில், துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் பலியானார்.
கடந்த 28 ம் தேதி மும்பையில் இருந்து சொந்த சட்டசபை தொகுதியான பாராமதிக்கு அஜித் பவார் தனி விமானத்தில் சென்றார். விமானம் தரையிறங்கியபோது துரதிர்ஷ்டவசமாக விமான நிலையத்தில் விபத்தில் சிக்கியது. விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் அஜித் பவார் அவது உதவியாளர், பாதுகாவலர், 2 பைலட்டுகள் என்று 5 பேரும் உடல் கருகி பலியாகினர். அஜித் பவாரின் உடல் நேற்று முன்தினம் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் அஜித் பவார் விட்டு சென்ற துணை முதல்வர் பதவியை அவரது மனைவி சுனேத்ரா பவார் ஏற்க உள்ளார். . அஜித் பவாருக்குப் பிறகு சுனேத்ரா பவாரை துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று அஜித் பவாரின் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்த நிலையில் அதன முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஏற்றுள்ளார்.
இதையடுத்து சுனேத்ரா பவார் இன்று மாலை 5 மணிக்கு மகாராஷ்டிரா துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு மகாராஷ்டிரா ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அதோடு கலால் துறை மற்றும் விளையாட்டு துறை அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. அதேவேளையில் அஜித் பவார் நிர்வகித்த நிதித்துறையை தேவேந்திர பட்னாவிஸ் வைத்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் தற்போது மாநிலங்களவை எம்.பியாக உள்ளார். இந்நிலையில், அவர் மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அடுத்த 6 மாதத்தில் அவர் எம்எல்ஏ ஆக வேண்டும். தற்போது அஜித் பவார் மரணத்தால் அவர் வென்ற பாரமதி சட்டசபை தொகுதி காலியாக உள்ளது. இதனால் அடுத்த 6 மாதத்தில் அந்த சட்டசபை தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலிலும் சுனேத்ரா பவார் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.சுனேத்ரா பவார் அக்டோபர் 18, 1963 அன்று மகாராஷ்டிராவின் தாராஷிவ்வில் பிறந்தார். சுனேத்ரா பவாருக்கு 1985-ல் அஜித் பவாருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்: பார்த் பவார், 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். ஜெய் பவார், ஒரு தொழிலதிபர். குடும்பத்தை கவனித்துக் கொள்வதோடு, கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களையும் நிர்வகித்து வருகிறார்.
கடந்த 2024ம் ஆண்டில் தான் அவர் அரசியலுக்குள் வந்தார். அப்போது அவர் தனது இளைய மாமனாரான சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து பாராமதி நாடாளுமன்ற தொகுதியில் களமிறங்கினார். இந்த தொகுதியில் சுப்ரியா சுலே 7 லட்சத்து 32 ஆயிரத்து 312 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். சுனேத்ரா பவார் 5,73,979 வாக்குகள் மட்டுமே பெற்று 1,58,33 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதன்பிறகு தான் அவர் ராஜ்யசபா எம்பியானார் என்பது குறிப்பிடத்தக்கது.







