மருதமலை தைப்பூசம்.!!

மருதமலை தைப்பூசம் 2026: 5-ஆம் நாள் உற்சவம் – முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை. பக்திப் பெருக்குடன் குவியும் பக்தர்கள் – ஜொலிக்கும் அலங்காரத்தில் முருகப்பெருமான் தரிசனம்

முருகப் பெருமானின் ஏழாம் படை வீடாகப் போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், தைப்பூசத் திருவிழாவின் ஐந்தாம் நாள் உற்சவம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான தைப்பூசப் பெருவிழா கடந்த ஜனவரி 26-ஆம் தேதி காலை மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, முறைப்படி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.அன்றில் இருந்து தினசரி முருகப்பெருமானுக்குப் பல்வேறு வாகனங்களில் வீதியுலா மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று, உற்சவ மூர்த்திக்குச் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருநீறு உள்ளிட்ட திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், முருகப்பெருமான் விசேஷ மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.

 

தைப்பூச திருவிழாவையொட்டி கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக மருதமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஐந்தாம் நாள் உற்சவமான இன்று, வரிசையில் நின்று பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்ற பக்தி முழக்கத்துடன் முருகனைத் தரிசித்துச் சென்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) நடைபெற உள்ளது. அன்று காலை சுவாமிக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். அதனை முன்னிட்டுத் தற்போது கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுத் திருவிழாக் கோலம் பூண்டு உள்ளது..