முதல் பிரஸ் மீட்..!!

தவெக தலைவர் விஜய்யை என்.டி.டி.வி குழுவினர் நேரில் சந்தித்து உரையாடினர்.தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேசிய ஊடகமான என்.டி.டி.வி குழுவினரைச் சந்தித்துத் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து உரையாடினார்.அப்போது, தனது ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் சிக்கலில் இருப்பது குறித்துக் கேட்டபோது, அரசியல் வருகையால் படம் பாதிக்கப்படுவது குறித்துத் தயாரிப்பாளருக்காக வருத்தப்படுவதாகவும், ஆனால் இத்தகைய சவால்களை முன்பே எதிர்பார்த்து மனதளவில் தயாராக இருந்ததாகவும் விஜய் குறிப்பிட்டார். சினிமா கரியரைத் திட்டமிட்டே கைவிட்டுள்ளதாகவும், தற்போது தனது முழு கவனமும் மக்கள் பிரச்சினைகள் மீதே இருப்பதாகவும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.தனது அரசியல் முடிவு குறித்துப் பேசிய அவர், இது திடீரென எடுத்த முடிவல்ல என்றும், கொரோனா காலத்திற்குப் பிறகு இதைப் பற்றித் தீவிரமாகச் சிந்தித்து முடிவெடுத்ததாகவும் கூறினார். தனது தந்தை அரசியல் பின்புலம் கொண்ட இயக்குநராக இருந்ததால், சிறுவயது முதலே அரசியலை அருகிலிருந்து கவனித்து வளர்ந்ததாகக் குறிப்பிட்ட விஜய், 33 ஆண்டுக்கால சினிமா வாழ்க்கையை விட்டு விலகுவது எளிதான முடிவல்ல என்றாலும், நீண்ட கால அரசியல் பயணத்திற்காகவே இந்த முடிவை மனப்பூர்வமாக எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.தேசிய ஊடகத்திற்குத் தான் அளித்த முதல் உரையாடலாக இதைக் கருதும் விஜய், இதை ஒரு ‘Mock Interview’ போலவே பார்ப்பதாகக் கூறினார். தான் போதுமான அளவு பேசுவதில்லை என்று எழுப்பப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், தனது பொதுக்கூட்ட உரைகள் மூலம் எப்போதும் மக்களுடன் பேசிக்கொண்டுதான் இருப்பதாகவும், சரியான நேரத்தில் நிச்சயம் ஊடகங்களைச் சந்தித்துப் பேசுவேன் என்றும் அந்த உரையாடலில் தெளிவுபடுத்தினார்.