பிப்ரவரி 1-ஆம் தேதி, நாடு முழுவதும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் அதே வேளையில், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பல முக்கியமான விதிமுறைகள் மாறப்போகின்றன. குறிப்பாக சமையல் எரிவாயு விலை, வாகனங்களுக்கான பாஸ்டேக் (FASTag) நடைமுறை மற்றும் சொத்துப் பதிவு போன்ற விஷயங்களில் அரசு கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள் பொதுமக்களின் பாக்கெட்டிலும், நேரத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.
முதலாவதாக, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படவுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியும் எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலையை மாற்றியமைக்கும். பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், வீட்டு உபயோக மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை கணிசமாகக் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இல்லத்தரசிகளிடையே எழுந்துள்ளது.
அதேபோல, விமான எரிபொருள் மற்றும் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி (CNG) கேஸ் விலையிலும் மாற்றங்கள் வரவுள்ளன.
வாகன ஓட்டிகளுக்கு ஒரு மிகப்பெரிய நிம்மதியான செய்தியைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 1 முதல் பாஸ்டேக் கார்டுகளுக்கான கூடுதல் கேஒய்சி (KYC) சரிபார்ப்பு முறை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இனிமேல் பாஸ்டேக் வாங்கிய பிறகு வாகன உரிமையாளர்கள் மீண்டும் மீண்டும் ஆவணங்களை சரிபார்க்க வேண்டிய அவசியமில்லை. வாகன விவரங்களை உறுதி செய்யும் முழுப் பொறுப்பையும் வங்கிகளே ஏற்றுக்கொள்ளும் என்பதால், பாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு இது பெரிய அலைச்சலை குறைக்கும் ஒரு மாற்றமாக அமையப்போகிறது.
அனைவரையும் கவனிக்க வைக்கும் மற்றொரு முக்கிய மாற்றம் சொத்துப் பதிவுத் துறையில் அரங்கேற உள்ளது. பிப்ரவரி 1 முதல் நிலம் அல்லது வீடு வாங்கும் போதும், விற்கும் போதும் ஆதார் சரிபார்ப்பு (Aadhaar Authentication) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் அம்சம் என்னவென்றால், சொத்து வாங்குபவர், விற்பவர் மட்டுமின்றி, அங்கு சாட்சியாகக் கையெழுத்திடுபவர்களும் தங்கள் ஆதாரை அங்கேயே பயோமெட்ரிக் மெஷினில் வைத்து உறுதி செய்ய வேண்டும். சார்பதிவாளர் அலுவலகங்களில் இதற்காகச் சிறப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் போலி ஆவணங்கள் தயாரிப்பது மற்றும் அடுத்தவர் பெயரில் சொத்துகளைப் பதுக்குவது போன்ற மோசடிகள் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.









