சேலம் ஓமலூரில் இன்று (ஜனவரி 29, 2026) பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.
தன்னை எப்படியாவது கட்சியில் இணைத்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் சுமார் 2,000 பேர் சேர்ந்து அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு என்பது ஓபிஎஸ்க்கு கட்சியில் இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதேசமயம் அதிமுக – பாஜக கூட்டணியில் சேர்த்து கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளிக்க எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார்.
ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஏற்பட்ட பின்னடைவிற்கு அவர் தான் காரணம் என்கின்றனர். ஏனெனில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் எந்த கூட்டணியில் இணைவது? என்ற முடிவை விரைந்து எடுக்கவில்லை. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்துவது என அறிவித்திருந்தார். அதையும் செய்யவில்லை. இவ்வாறு அடுத்தடுத்து இழுபறியானதால் தங்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் எனக் கருதி மனோஜ் பாண்டியன் முதல் வைத்திலிங்கம் வரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் வெளியேறி மாற்று கட்சிகளில் இணைந்தனர்.
தற்போது தனித்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தான், மீண்டும் அதிமுகவில் இணைத்து கொள்ளுமாறு குரல் எழுப்பி வருவதாக கூறுகின்றனர். அதுவும் எந்தவித நிபந்தனையும் இன்றி சேர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அதிமுகவின் கதவுகள் மூடப்பட்டிருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக பேசிய மூத்த பத்திரிகையாளர் லட்சுமி, என்னை பொறுத்தவரை ஓபிஎஸ் அவர்கள் அதிமுகவில் இருக்க மாட்டார். ஆனால் என்.டி.ஏ கூட்டணிக்குள் தான் இருப்பார்.
பாஜக வேட்பாளராக நிற்பாரா? அமமுக வேட்பாளராக நிற்பாரா? சுயேட்சையாக நிற்பாரா? என்பதற்கான ஏற்பாடுகளை பாஜக நிச்சயம் செய்யும். முன்னதாக டிடிவி தினகரன் சேர்த்து கொள்ளப்பட்ட விஷயத்தை கவனிக்க வேண்டும். தனது பொதுச் செயலாளர் நாற்காலிக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி மிகவும் கவனமாக இருக்கிறார். அதை கருத்தில் கொண்டு டிடிவி தினகரனை சேர்த்து கொண்டார். இவர் அமமுக என்ற பெயரில் தனியாக கட்சி நடத்தி கொண்டிருக்கிறார். எனவே தன்னுடைய தலைமைக்கு பாதிப்பு வராது என நினைக்கிறார்.







