தமிழக சட்டப்பேரவையில், 2025 ஏப்ரல் மாதம் பத்திரப்பதிவில் புதிய விதிகளை சேர்ப்பதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் மூர்த்தி அறிமுகம் செய்தார். இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, பதிவுச்சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தம் காரணமாக நில மோசடிகளை தடுக்க தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய அதிகாரம் கிடைத்துள்ளது. முக்கிய அம்சமாக, இனி எந்தவொரு சொத்தையும் விற்பனை செய்யவோ அல்லது தானமாக வழங்கவோ பதிவு அலுவலகத்திற்கு செல்லும்போது, அந்த சொத்தின் அசல் ஆவணம் கண்டிப்பாக தாக்கல் செய்யப்பட வேண்டும்.
இதற்கு முன், அசல் ஆவணம் தொலைந்துவிட்டதாக கூறி பொய் புகார் அளித்தோ அல்லது நகல் ஆவணங்களை வைத்தோ முறைகேடாக சொத்துப்பதிவு நடந்தன. இனி அப்படி செய்ய முடியாது. இந்த சட்டம் மோசடி பத்திரப்பதிவில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனைகளை வழங்குகிறது. பொய் தகவல்களை அளித்து சொத்துப்பதிவு செய்பவர்களுக்கும், உடந்தையாக இருக்கும் அதிகாரிகளுக்கும் 3 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். சில குறிப்பிட்ட நேரங்களில் அசல் ஆவணங்கள் இல்லையென்றாலும் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகள் நிலங்களை மாற்றும்போது இதற்கு விதிவிலக்கு உண்டு. மேலும், நீதிமன்றத்தின் மூலம் சொத்து விற்பனை நடக்கும்போது, குடும்பத்திற்குள் நடக்கும் பாகப்பிரிவினையின் போது ஒருவரிடம் மட்டும் அசல் இருந்தால்போதும் பத்திரப்பதிவு செய்யலாம்.








