வாடிக்கையாளர்களின் அன்பான கவனத்திற்கு…

சென்னை: வாரத்தில் இரண்டு நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு கிழமைகள்) விடுமுறை வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுக்க வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

தற்போது நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் வாரத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் ஞாயிற்றுக் கிழமைகளை போல சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக வார நாட்களில் தினமும் 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் பணியாற்றுவோம் என வங்கி சங்கங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் தான் கடந்த 23 ஆம் தேதி அன்று மத்திய தொழிலாளர் ஆணையருடன் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படாததால், வங்கி ஊழியர்கள் சம்மேளனத்துடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து வேலைநிறுத்த ஐந்து நாள் வங்கிப் பணிக்கான கோரிக்கையை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளான ஸ்டேட் பேங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இன்று வங்கி சேவை பாதிக்கப்படும். பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட வங்கி சார்ந்த சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

எனினும் தனியார் வங்கி சேவைகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என்று கூறப்படுகிறது. HDFC, ICICI, Axis போன்ற தனியார் வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதால் தனியார் வங்கிச் சேவைகள் வழக்கம் போல் இயங்கும்.

முன்னதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் (AIBOC) பொதுச் செயலாளர் ரூபம் ராய் கூறுகையில், அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாளாக அறிவிக்கும் முடிவு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்திய வங்கிகள் சங்கம் – UFBU இடையே நடந்த ஊதிய திருத்த ஒப்பந்தத்தின்போது ஏற்கப்பட்டது என்றார். வாரம் 5 நாட்கள் வேலை நாள் என்ற நடைமுறையால், தினமும் 40 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளன. இதனால் உழைப்பும், நேரமும் குறையாது. எங்களது நியாயமான கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காதது துரதிர்ஷ்டவசமானது” என்று கூறினார்.