கடும் பனிப்பொழிவில் உறையும் காஷ்மீர்..!

நீண்ட கால வறட்சிக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் இந்தப் பனிப்பொழிவு, ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும், மறுபுறம் போக்குவரத்து மற்றும் கல்வி நிலையங்களின் செயல்பாட்டை முடக்கியுள்ளது.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஓடுதளத்தில் பனி குவிந்ததால், சுமார் 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை, முகல் சாலை மற்றும் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை ஆகிய மூன்று முக்கிய வழித்தடங்களும் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ளன. குறிப்பாக பனிஹால் பகுதியில் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஜோரி, பூஞ்ச் மற்றும் கதுவா மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு காஷ்மீரில் சாலைகளில் குவிந்துள்ள பனிக்கட்டிகளை அகற்ற சுமார் 300 இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் 5 அங்குலம் முதல் 1 அடி வரை பனி குவிந்துள்ளதால், மீட்புப் பணி சவாலாக உள்ளது. அவசர கால உதவிகளுக்காக மாநிலம் முழுவதும் 26 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். சாலைகள் சீரமைக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை, மலைப்பாதைகளில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.