விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் சரியா..?

சென்னை: கடந்த 2016-2017 ம் ஆண்டில் நடிகர் விஜய் ‘புலி’ படத்துக்கு வாங்கிய ரூ.15 கோடியை மறைத்ததாக கூறி ரூ.1.50 கோடியை வருமான வரித்துறை அபராதம் விதித்தது.

இதனை ரத்து செய்யக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்த நிலையில் இன்று இறுதி வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். இன்றைய தினம் விஜய் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் வருமாறு:

நடிகர் விஜய் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு நுழைந்துள்ளார். இந்நிலையில் தான் கடந்த 2016-2017 நிதி ஆண்டுக்கான வருமான வரியை நடிகர் விஜய் தாக்கல் செய்தார். அப்போது ரூ.35.42 கோடி வருமானம் ஈட்டியதாக கூறியிருந்தார். ஆனால் அவர் தனது வருமானத்தை மறைத்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து வருமான வரித்துறையினர் விஜய் வீட்டில் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றினர். அப்போது விஜய் தான் நடித்த புலி படத்துக்கு பெற்ற சம்பளத்தில் ரூ.15 கோடியை வருமானத்தில் காட்டவில்லை எனக்கூறி ரூ.1.50 கோடியை அபராதமாக விதித்தது.

இந்த அபராதத்துக்கான நோட்டீஸ் 2022ம் ஆண்டு ஜூன் மாதம் விஜய்க்கு வழங்கப்பட்டது. இதனை விஜய் விரும்பவில்லை. அபராதம் செலுத்த அவர் மறுத்தார். மேலும் வருமான வரித்துறையின் நோட்டீஸ் காலம் தாழ்ந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வருமான வரித்துறை சார்பில் கடந்த 9 ம் தேதி வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது ”வருமான வரித்துறை சட்டத்தின்படியே விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம் விதித்ததில் எந்த தவறும் இல்லை. இதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதம் வைக்கப்பட்டது.

அதன்பிறகு விஜய் தரப்பு வாதத்துக்காக வழக்கு ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்னிலையில் வழக்கு வந்தது. விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”விஜய் வருமானத்தை மறைத்ததாக கூறி அபராதம் விதிக்கப்பட்டு இருந்தால் அதனை 2019ம் ஆண்டுக்கு முன்பாகவே செய்திருக்க வேண்டும். ஆனால் வருமான வரித்துறை அப்படி செய்யவில்லை. காலம் தாழ்த்தி 2022ம் ஆண்டில் அபராதம் செலுத்த கூறுகிறது. இதனால் இந்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதத்தை வைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.