தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் வழக்கமாக அமாவாசை மற்றும் பௌர்ணமி காலங்களில் கடல் உள்வாங்குவது வழக்கத்தில் இருந்து வரும் நிலையில் திடீரென வழக்கத்திற்கு மாறாக கடல் உள்வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்செந்தூர் கோவில் முன்புறம் உள்ள படிக்கட்டு முகப்பு பகுதியில் கடல் நீர் சுமார் 60 அடி தூரம் பின்னோக்கிச் சென்றது. கடந்த ஜனவரி 18-ம் தேதி அமாவாசை நிலவிய நிலையில், அதன் தாக்கத்தால் நேற்று காலை இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. மாலையில் கடல் நீர் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
கடல் நீர் உள்வாங்கியதால், எப்போதும் தண்ணீருக்குள் இருக்கும் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. எனினும், சுனாமி போன்ற அச்சம் ஏதுமில்லாததால் பக்தர்கள் எவ்வித பயமுமின்றி கடலில் புனித நீராடினர்.
பொதுவாக சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் அய்யா வைகுண்டர் அவதார பதிக்கு இடைப்பட்ட பகுதியில் தான் கடல் உள்வாங்கும். ஆனால், இம்முறை கோவில் படிக்கட்டு முகப்பு பகுதியில் உள்வாங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த ஜனவரி 4-ம் தேதி பௌர்ணமியையொட்டி இதே பகுதியில் சுமார் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியது நினைவிருக்கலாம். கடந்த இரண்டு மாதங்களாக இந்தப் பகுதியில் சுமார் 200 அடி நீளத்திற்கும், 4 அடி ஆழத்திற்கும் பலத்த கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பாதுகாப்பு கருதி கோவில் நிர்வாகம் சார்பில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன..







