இந்த அறிவிப்புகள் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு எனப் பல துறைகளில் அரசின் தற்போதைய செயல்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன. தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட 15 முக்கிய அறிவிப்புகள் குறித்து பார்ப்போம்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 24-ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு குழு முடிவு செய்துள்ளது. மறைந்த எம்.எல்.ஏ-க்களுக்கு இரங்கல் தெரிவித்து இன்று அவை ஒத்திவைக்கப்படும். ஜனவரி 22, 23 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரை மீதான விவாதமும், 24-ஆம் தேதி முதலமைச்சரின் பதிலுரையும் இடம்பெறும்.
தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 850 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 140 கோடி ரூபாய் கூடுதலாகும். குறிப்பாக பொங்கல் மற்றும் போகி ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் 518 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB) 999 செவிலியர் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் செவிலியர் உதவியாளர் சான்றிதழ் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு கிடையாது, தகுதி அடிப்படையிலேயே தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 8.
மழையினால் சேதமான சாலைகளைச் சீரமைக்க தமிழக அரசு 1000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில் சென்னை தவிர்த்த 24 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு 700 கோடியும், சென்னை மாநகராட்சிக்கு 100 கோடியும், பேரூராட்சிகளுக்கு 200 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026-27 கல்வியாண்டுக்கான JEE முதல் கட்ட முதன்மைத் தேர்வுகள் இன்று (ஜனவரி 21) தொடங்கி ஜனவரி 30 வரை நடைபெறுகிறது. தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெறும் இந்தத் தேர்வை எழுத 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
பிப்ரவரி 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் மாமல்லபுரத்தில் சுற்றுலா முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. மேலும், ஜனவரி 28, 29 தேதிகளில் சென்னையில் உலக அளவிலான கல்வி மாநாடு (Global Education Summit) நடைபெற உள்ளது. கொடைக்கானலில் 100 ஏக்கரில் சுற்றுலா கிராமம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் ஜனவரி 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஜனவரி 18-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக இந்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களில் நிப்பா தொற்று பரவி வருவதால், பறவைகள் அல்லது விலங்குகள் கடித்த பழங்களை உண்ண வேண்டாம் என தமிழக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் பாதிப்பு இல்லை என்றாலும், பதநீர் அருந்துவதிலும் விழிப்புணர்வு தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் கண்டறியப்பட்ட ‘அல்மாட் கிட்’ (Almat Kit) என்ற மருந்தில் எத்தலின் கிளைக்கால் என்ற நஞ்சு கலந்திருப்பதால், அதன் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்குத் தமிழக மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. இது சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மருந்தகங்கள் இதனை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதற்கான தேர்வுகள் நடைபெறும்.
தென்னிந்தியாவில் இருந்து வடகிழக்கு பருவமழை முழுமையாக விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றும், ஜனவரி 23 முதல் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கச் சாவடிகளில் (Toll Gates) ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ரொக்கப் பணமாக சுங்கக் கட்டணம் செலுத்துவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட உள்ளது. இனி பாஸ்டாக் (FASTag) முறை மட்டுமே கட்டாயமாக்கப்படும் என்று மத்திய அரசு புதிய விதியைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
இந்திய ரயில்வே ஆர்.ஆர்.பி (RRB) குரூப்-டி பிரிவில் 22,000 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 20 வரை நடைபெறும். தபால் மூலம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.
ஜனவரி 26 (குடியரசு தினம்) மற்றும் பிப்ரவரி 1 (வள்ளலார் நினைவு தினம்) ஆகிய நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







