ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் கேலக்ஸி மற்றும் அமெரிக்காவின் இரண்டு ரோட்டரி கிளப்புகள் சார்பில் 55 குழந்தைகளுக்கு 52 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான டைப் ஒன் டயாபடீஸ் இன்சுலின் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் டைப் ஒன் டயாபடீஸ் எனப்படும் முதல் நிலை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தினசரி நான்கு முறை இன்சுலின் ரத்தத்தில் செலுத்தப்பட வேண்டும்.இதை செலுத்த தவறும் பட்சத்தில் அந்த குழந்தைகளுக்கு கோமா நிலை ஏற்படுவதோடு, சிறுநீரகம், கண் உள்ளிட்டவை பாதிக்கப்படும் நிலையும் ஏற்படும் அபாயம் உள்ளது. அதே சமயம் முறையாக மருந்துகள் செலுத்தப்படும் போது நீரிழிவு நோய் கட்டுக்குள் இருந்து அவர்களின் உயிர் காக்கப்படும்.இதற்காக தானியங்கி ஊசி வகை இன்சுலின் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதற்கு பயன்படுத்தப்படும் இன்சுலின், ஊசி, பம்ப் மற்றும் மருந்து ஆகியவை இரண்டு வருடங்களுக்கு சுமாராக 2.50 லட்சம் வரை செலவாகிறது. இதையடுத்து ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் கேலக்ஸி அமைப்பு, அமெரிக்காவின் ரோட்டரி கிளப் ஆப் செஸ்டர் கவுண்டி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மிட்டவுன் ஆகியவற்றுடன் இணைந்து 52 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பதிப்பிலான இன்சுலின் மருந்துகளை வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் கேலக்ஸியின் மாவட்ட முன்னாள் ஆளுநர் சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் ராஜசேகர் சீனிவாசன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் வருங்கால மாவட்ட ஆளுநர் செல்லா, மாவட்ட தலைவர் பழனியப்பன், மாவட்ட துணை ஆளுநர் சி.டி.ராமசாமி, லட்சுமி செராமிக்ஸ் நிறுவனங்களின் தலைவர் முத்துராமன் உள்ளிட்டார் கலந்து கொண்டனர். முதல் கட்டமாக மூன்று பம்புகளை 52 குழந்தைகளுக்கு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தனர். இதன் மூலம் 55 குழந்தைகள் மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினரும் பலனடைவார்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.







