கோவையில், வாழும் கலை அறக்கட்டளையின் சார்பில் பள்ளிகளுக்கிடையேயான “ஸ்வர தாரங்கிணி” பஜனை போட்டி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
குழந்தைகளிடையே பஜனை பாடலின் பண்டைய இந்திய பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நோக்குடன் நடைபெற்ற விழாவில், இசையின் மூலம் ஒழுக்கம், மன அமைதி, உணர்ச்சி சமநிலை மற்றும் ஒற்றுமை போன்ற மதிப்புகளை வளர்ப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இந்த முயற்சி பூஜ்ய குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் போதனைகளில் இருந்து ஊக்கம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
வாழும் கலை தமிழ்நாடு தலைமை அமைப்பின் உறுப்பினரும், சி எஸ் அகாடமியின் நிறுவனருமான சித்தாரா விக்ரம் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார். அவர் பேசுகையில், இன்றைய தலைமுறை குழந்தைகள் கல்வி அழுத்தம், டிஜிட்டல் தாக்கம் மற்றும் மன அழுத்தம் நிறைந்த சூழலில் வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். பஜனை பாடுதல் மனதை அமைதிப்படுத்தி, சுவாசத்தை ஒழுங்குபடுத்தி, உணர்ச்சி நிலைத்தன்மையை உருவாக்கும் என்றும், பஜனைகள் குழந்தைகளின் கவனம், மகிழ்ச்சி மற்றும் உள் பாதுகாப்பை மேம்படுத்தும் சக்திவாய்ந்த கருவியாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, மாணவர்களுக்காக “ஸ்வர தாரங்கிணி” பஜனை புத்தகம் வெளியிடப்பட்டது. ஆண்டு முழுவதும் பஜனைகளுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள உதவும் வகையில் மாதாந்திர கருப்பொருள்கள், திருவிழா சார்ந்த பஜனைகள் மற்றும் சுய பரிசீலனைக்கான இடங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
மேலும், பஜனை கற்றல் மற்றும் சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் “ஸ்வர தாரங்கிணி” என்ற பிரத்யேக இணையதளமும் தொடங்கப்பட்டது.
போட்டியை வெற்றிகரமாக நடத்த உதவிய பள்ளிகள், பெற்றோர், தன்னார்வலர்கள், ஆதரவாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் வளமான பக்தி மற்றும் கலாச்சார மரபுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் உறுதிப்பாட்டுடன், “ஸ்வர தாரங்கிணி’ பஜன் போட்டி உற்சாகமாக தொடங்கியது.
பள்ளி மாணவ மாணவர்கள் பங்கேற்ற “ஸ்வர தாரங்கிணி” பஜன் போட்டி







