சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு விராசாத் கடன் மற்றும் கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் மற்றும் வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம்-1-ல் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம / நகர்ப்புறங்களில் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம் 2-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம / நகர்ப்புறய்களில் ரூ.8,00,000/- வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும். (திட்டம் 1-ன் கீழ் நன்மைகளை பெற முடியாத நபர்கள்)
திட்டம் 1-ன்கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.20,00,000/-ம், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000/- கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில், அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 10%, பெண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும், நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- கடன் வழங்கப்படுகிறது.
மேலும், சிறுபான்மையின மாணவ, மாணவியர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை / முதுநிலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000/- வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம்-2-ன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியருக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத் கடன் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில், மூலப்பொருட்களான உபகரணங்கள் / கருவிகள் / இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது. எனவே சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கடன் விண்ணப்பங்களுடன் தனிநபர் கடன், சுய உதவி குழுக் கடன், விராசாத் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) ஆகிய கடன் திட்டங்களுக்கு சிறுபான்மையினர் மதச்சான்றிதழ், சாதிச் சான்று, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, திட்ட அறிக்கை மற்றும் வங்கி கோரும் தேவையான ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும், கல்விக் கடன் பெற பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல், உண்மை சான்றிதழ் (Bonafide Certificate) அசல், கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது அசல், மதிப்பெண் சான்றிதழ் நகல் ஆகியவற்றையும் இணைத்து சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே, தமிழ்நாட்டில் வசிக்கும் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர். சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை நீங்கள் வசிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட / மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடையலாம்.









