Waste To Art கண்காட்சி!பள்ளி மாணவர்கள் செய்த பொருட்கள்!

கோவை: கோவையில் Waste To Art கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் செய்த பொருட்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நெகிழி பயன்பாட்டை குறைப்பது, குப்பைகளை மறு சுழற்சி செய்வது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.Waste To Art என்ற தலைப்பில் நெகிழி பொருட்கள், வீட்டில் பயன்படுத்தப்பட்டு குப்பைகளில் தூக்கி எறிய கூடிய பொருட்களை கொண்டு அலங்கார பொருட்கள், அறிவியல் சார்ந்த பொருட்கள் செய்வது குறித்து பள்ளி மாணவர்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டன.

மண்டல அளவில் நடைபெற்ற போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிபடுத்தப்பட்டது. இதில் 1000க்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. நெகிழி, தேங்காய் சிரட்டை, தெர்மாகோல், அட்டை, குழாய்கள் போன்ற வீட்டில் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறிய கூடிய பொருட்களை கொண்டு பள்ளி மாணவர்கள் பல்வேறு அலங்கார பொருட்கள், அறிவியல் சார்ந்த பொருகள், நாட்டின் முக்கிய இடங்கள், ராக்கெட்டுகள், மழை நீர் சேமிப்பு மாதிரிகள் ஆகியவற்றை வடிவமைத்திருந்தனர்.

இதில் காட்சிப்படுத்தப்பட்ட ராக்கெட்டுகள், மழை நீர் சேமிப்பு மாதிரிகள், பொதிகை மலை மாதிரியில் குறிப்பிடப்பட்டிருந்த விழிப்புணர்வு வாசகங்கள், ரோபோக்கள் ஆகியவை பார்ப்போரை கவர்ந்தன.