தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், 19.01.2026 அன்று மாமல்லன் நீர்த்தேக்க அடிக்கல் நாட்டு விழாவில், மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை புனரமைத்து பாதுகாக்க சிறப்பாக செயலாற்றிய 15 அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு “முதலமைச்சர் சிறந்த நீர் பாதுகாப்பு விருது” வழங்கப்பட்டது.
இந்த விருதை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாக அறங்காவலர் இரா. மணிகண்டன் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நீர்வளத்துறை செயலாளர் ஜெ. ஜெயகாந்தன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தி. சினேகா, சார் ஆட்சியர் மாலதி ஹெலன், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் (பொ.ப.து) திலகம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு நிகழ்வில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் 15 தன்னார்வ அமைப்புகளுக்கு முதல்வர் விருதுகளை வழங்கி கௌரவித்தார். அதில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பும் “முதலமைச்சர் சிறந்த நீர் பாதுகாப்பு விருது” பெற்றது.
மேலும், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில், ஓவியர் ஜீவா வரைந்த, நீர் மேலாண்மைக்கான வரலாற்று ஆவணமாக விளங்கும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் வடக்கு பிரகாரச் சுவரில் உள்ள கல்வெட்டு குறிப்பேட்டுடன் கூடிய கொங்குச் சோழன் வீரராசேந்திரன் உருவம் கொண்ட நினைவுப் பரிசையும், அமைப்பின் செயலாளர் சுரேஷ், நீர்வளத்துறை செயலாகளிடம் வழங்கினார்.








