சீனாவின்’பெய்ஜிங் லினி யுஞ்சுவான்’ (Beijing Linyi Yunchuan) என்ற நிறுவனம், உலகின் முதல் மிக உயரமான மிதக்கும் காற்றாலையை (Ultra-tall Floating Wind Turbine) வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
‘SAWES S2000’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மிதக்கும் காற்றாலை, சமீபத்தில் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சோதனை செய்யப்பட்டது. இது தரைமட்டத்திலிருந்து சுமார் 6,500 அடி (2,000 மீட்டர்) உயரத்திற்குப் பறக்கவிடப்பட்டது. வெறும் 30 நிமிடச் சோதனையிலேயே, இது 385 kWh (கிலோவாட் மணி) மின்சாரத்தை உற்பத்தி செய்து உள்ளூர் மின் தொகுப்புடன் இணைத்துள்ளது.
பார்ப்பதற்கு ஒரு ராட்சத பலூன் அல்லது ‘ஏர்ஷிப்’ (Airship) போல இருக்கும் இந்த அமைப்பில் ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ளது. இது தானாகவே மேலே எழும்பும் திறன் கொண்டது.
தரையில் காற்று எப்போது வீசும் என்று சொல்ல முடியாது. ஆனால், 2 கி.மீ உயரத்தில் காற்று எப்போதுமே மிகவும் வேகமாக மற்றும் சீராக வீசும். அங்கிருக்கும் காற்றின் ஆற்றலை இது பயன்படுத்துகிறது.
மேலே தயாரிக்கப்படும் மின்சாரம், இந்த பலூனைப் பிடித்து வைத்திருக்கும் மிக வலுவான கேபிள் (Tether) வழியாகப் பூமிக்குக் கடத்தப்படுகிறது.
வழக்கமான காற்றாலைகளை அமைக்க நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் தேவை. இதற்கு அது தேவையில்லை.
வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில், கரண்ட் இல்லாத இடங்களுக்கு இதை உடனே கொண்டு சென்று பறக்கவிட்டு மின்சாரம் தயாரிக்க முடியும்.
பெரிய டவர்கள் கட்டத் தேவையில்லை என்பதால் உற்பத்திச் செலவு குறையும்.
எதிர்காலத்தில் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து ஒரு பலூன் பறந்துகொண்டிருந்தால் ஆச்சரியப்படாதீர்கள்; அது உங்கள் வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கலாம்!






