3 மடங்கு உயர்ந்த ஆம்னி பஸ் கட்டணம்..!

தொழில் நிறுவனங்கள் கல்லூரிகள் அதிகம் நிறைந்த கோவையில், வியாபாரம் செய்வதற்காகவும், பணிக்காகவும், படிப்பதற்காகவும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் தங்கி வருகின்றனர். அவர்கள் பொங்கல் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். தற்போது பொங்கல் விடுமுறை முடிந்து இன்று ( திங்கள்கிழமை) பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன. தொழில் நிறுவனங்களும் செயல்பட தொடங்கின. இதையடுத்து சொந்த ஊருக்கு சென்றிருந்தவர்கள் கோவைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். ஆனால் நேற்று ஆம்னி பஸ் களின் டிக்கெட் கட்டணம் வழக்கத்தை விட 3 மடங்கு உயர்த்தப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சியும் அவதியும் அடைந்தனர். சென்னையில் இருந்து கோவைக்கு வர ரூ. 4 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதுபோன்று கோவையிலிருந்து சென்னை சென்றவர்களும் 3 மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது .இது தவிர நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் கோவைக்கு வர கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு முடிந்திருந்தது. இதனால் வேறு வழி இன்றி பலரும் கட்டணத்தை பொருட்படுத்தாமல் ஆம்னி பஸ்களில் பயணம் செய்தனர்.

கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர்களிலிருந்து திருச்சி, , தேனி, திண்டுக்கல், மதுரை நெல்லை, தூத்துக்குடி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கோவை திரும்புவதற்கு வசதியாக கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன இன்று (திங்கட்கிழமையும்) சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.