மதுரை பொந்துகம்பட்டியைச் சேர்ந்த அஜித்தும், பொதும்புவைச் சேர்ந்த பிரபாகரனும் தலா 16 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டனர். இதனால் முதல் பரிசான கார் யாருக்கு என்பதை முடிவு செய்ய அதிகாரிகள் முன்னிலையில் குலுக்கல் நடத்தப்பட்டது. இதில் அஜித் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொந்துகம்பட்டி அஜித் (16 காளைகள்) முதலிடம் பெற்ற நிலையில், அவருக்கு முதல் பரிசான கார் வழங்கப்பட்டது. அதே போன்று இரண்டாம் இடம் பெற்ற பொதும்பு பிரபாகரன் (16 காளைகள்) இரண்டாம் பரிசான பைக் வழங்கப்பட்டது. நாமக்கல் கார்த்தி (11 காளைகள்) – மூன்றாம் இடம் பெற்றதால் இவருக்கும் பைக் பரிசாக வழங்கப்பட்டது.
பரிசினைப் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அஜித், “பாலமேடு ஜல்லிக்கட்டு களம் மிகவும் சவாலாக இருந்தது. அதிக மாடுகளைப் பிடித்து வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடனேயே வந்தேன். முதலிடம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் தமிழக அரசு எனக்கு ஒரு அரசு வேலை வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும்” என்று தனது கோரிக்கையையும் முன்வைத்தார்.









