பஸ் நிலையங்களில் கடும் கூட்ட நெரிசல்..!

பொங்கல் பண்டிகையையொட்டி கோவை பஸ் நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-பண்டிகை காலங்களில் ரயில் பஸ்களில் முன்பதிவு விரைவாக முடிந்து விடுகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் சிறப்பு பஸ்களில் பயணம் செய்யும் நிலை உள்ளது. இதன் காரணமாக வெளியூர் செல்லும் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அப்போது பஸ்சில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறுகின்றனர். இதனால் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் நுழையும் போதே முண்டியடித்து ஏறி இருக்கையில் இடம் பிடித்து விடுகின்றனர். இதனால் குடும்பத்துடன் வரும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது .சில ஆண் பயணிகள் பெண் பயணிகளின் இருக்கைகளை ஆக்கிரமித்து விடுகிறார்கள். இதனால் குடும்பத்துடன் வருபவர்களுக்கு இருக்கைகள் கிடைப்பதில்லை. எனவே வேறு வழியின்றி கூட்ட நெரிசலுக்கு மத்தியில் பல மணி நேரம் நின்று கொண்டே நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் . பஸ்சில் பயணிகளை வரிசையாக ஏற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்ட நெரிசலை சமாளிக்க, திருட்டு நடக்காமல் தடுக்க பஸ் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும்..இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து அரசு பஸ் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் பயணிகளை வரிசையாக நிற்க வைத்து பஸ்சில் ஏற வைப்பதை அமல்படுத்த முடியவில்லை. ஆனாலும் கூட்டத்தை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கு பயணிகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றனர்.