அனுமதி இன்றி குடோனில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது.
ஈரோடு அருகே உள்ள சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபு. தனியார் சர்க்கரை ஆலையில் வேலை செய்து வரும் இவர், தீபாவளி பண்டிகையின் போது தனது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.கடந்த தீபாவளி பண்டிகைக்காக கொள்முதல் செய்த பட்டாசுகளை விற்பனை செய்துவிட்டு, மீதமுள்ள 15ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை, சின்னியம்பாளையத்தில் பானுமதி என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் இருப்பு வைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டில் இருப்பு வைத்திருந்த பட்டாசு திடீரென்று வெடிக்க தொடங்கியது. இதனைக் கண்ட அப்பகுதியினர் மொடக்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.எனினும் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது. சம்பவம் தொடர்பாக மொடக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.







