ADSP லஞ்சம்!ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு!

ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம், நில மோசடி வழக்கில்  சமரசம் செய்து வைக்க , 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, கூடுதல் எஸ்.பி. மீது ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கூடுதல் எஸ்.பி,முதல்வரிடம் நேர்மையான அதிகாரிக்கான  விருது பெற்றவர்.

ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களான, நாகராஜன் மற்றும் நூருல்லா, நிலம் வாங்குவதற்கு வழங்கிய 2.42 கோடி ரூபாய் முன்பணத்தை விற்பனையாளர்கள் திருப்பித் தர மறுத்ததையடுத்து, 2023-ஆம் ஆண்டு கோவை  மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரை விசாரித்த, அப்போதைய உதவி ஆணையர் குணசேகரன், எதிர் மனுதாரரிடம் இருந்து பணத்தை மீட்டுத் தர, 10 சதவீதத்தை லஞ்சமாக கேட்டுள்ளார்.

இதற்காக பிரவீன் என்ற தனியார் நபரை இடைத்தரகராக பயன்படுத்திய அவர், முதற்கட்டமாக மீட்கப்பட்ட தொகையிலிருந்து தனக்கு ரூ. 5 லட்சமும், இடைத்தரகருக்கு கமிஷனாக ரூ. 1 லட்சமும் வழங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளார். இதில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி இடைத்தரகர் மூலம் ரூ. 4.40 லட்சத்தை குணசேகரன் பெற்றுக்கொண்டது, இடைத்தரகர் தனது கமிஷன் தொகையை மனைவியின் வங்கி கணக்கிற்கு பெற்றதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

தற்போது கோவை மாநகர காவலர் பயிற்சி பள்ளியில்  கூடுதல் எஸ்.பி.யாக  பணியாற்றி வரும் குணசேகரன் மீதும், இடைத்தரகர் பிரவீன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உயர் காவல்துறை அதிகாரி ஒருவரே லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் எஸ்.பி,முதல்வரிடம் நேர்மையான அதிகாரிக்கான  விருது பெற்றவர்.