சாலைகளில் மரணக்குழிகள்:முதியவர் விபத்தில் சிக்கி படுகாயம்:

கோவை காந்திபுரம் பாப்பநாயக்கன் பாளையம் சாலையில் குடிநீர் கசிவால் உருவான பள்ளத்தில் முதியவர் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகர சாலைகள் தற்போது வாகன ஓட்டிகளின் மரண களமாக மாறி வருகின்றன. ஆங்காங்கே தோண்டப்பட்டு உள்ள குழிகள் மற்றும் சரிவர மூடப்படாத பள்ளங்களால் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், காலை நிகழ்ந்த ஒரு விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்து சுயநினைவின்றி காணப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை காந்திபுரத்தில் இருந்து பாப்பநாயக்கன் பாளையம் செல்லும் சாலையில் நடுவே, சிறிய அளவில் பள்ளம் ஒன்று இருந்துள்ளது அந்தப் பகுதியில் குடிநீர் குழாய் கசிவு ஏற்பட்டு உள்ளதால் வெளியேறும் நீர், அந்த பள்ளத்தில் நிரம்பி உள்ளது இதனால் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் இன்று காலை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் ஒருவர் எதிர்பாராத விதமாக அந்த குழிக்குள் சிக்கினார்.

நிலைதடுமாறி அவர் சாலையில் கீழே விழுந்தார், இதில் படுகாயம் அடைந்த அவரை அவ்வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் மீட்டனர். மேலும் அவர் சுயநினைவின்றி இருந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை மாநகரில் தற்பொழுது பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது ஆனால் பணிகள் முடிந்த இடங்களில் முறையாக சாலைகள் அமைக்கப்படாததால் கனரக வாகனங்கள் செல்லும் பொழுது அந்த இடங்களில் திடீரென குழிகளும் மற்றும் பள்ளங்களாக மாற்றப்படுகிறது.

குடிநீர் குழாய் உடைப்பு அல்லது சிறு பள்ளங்கள் ஏற்பட்டால் அதனை அப்பகுதி மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற விபத்துகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க முடியும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.