வனத்துறைக்கு துப்பாக்கிகள்!உதயநிதி!

தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவையில் அமைக்கப்பட்டுள்ள வன விலங்குகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட வனத்துறை புதிய திட்டங்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகம் வளாகத்தில், தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்களின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.முன்னதாக, வனத்துறைக்காக புதிதாக வாங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து, வனப்பணியின் போது உயிர் நீத்த வனத்துறையினருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் கோவையில் தமிழ்நாடு வனப் படை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் 123 துப்பாக்கிகள், 19 பிஸ்டல்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வனத்துறைக்கு வழங்கினார்.மேலும், கோவை மாவட்டம் சிறுமுகை பெத்திக்குட்டை பகுதியில் ரூ.19.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இது தமிழ்நாட்டில் வன விலங்குகளுக்காக அமைக்கப்பட்ட முதல் சிறப்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையமாகும்.

அதேபோல், ரூ.8 கோடி மதிப்பீட்டில் கோவை சாடிவயல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை முகாம் மற்றும் ரூ.2 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட மின்னணு ஆவண காப்பக சேமிப்பகத்தையும் அவர் திறந்து வைத்தார். இந்த மின்னணு ஆவண காப்பகத்தின் மூலம் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆவணங்கள் முதல், வனத்துறையுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்கள் மற்றும் வரைபடங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.இந்த புதிய திட்டங்கள் வன உயிரினங்களின் பாதுகாப்பு, சிகிச்சை மற்றும் வனத்துறையின் நிர்வாக திறனை மேம்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளன.