பி. கந்தசாமி, மாநில பொதுச் செயலாளர் விவசாயிகள் சங்கம் (சாதி மதம் கட்சி சார்பற்றது) ,தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம்.
பெருமதிப்பிற்குரிய ஐயா,
தமிழக விவசாயிகளின் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட தாங்கள், பல ஆண்டு காலமாக விவசாய மின் இணைப்பு கிடைக்கப்பெறாமல் இன்னலுற்ற நிலையில் ,தட்கல் மின் இணைப்பு வழங்க ஆணையிட்டதை விவசாயிகள் ஒருமித்து வரவேற்கின்றனர். தட்கல் மின் இணைப்பு விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயம் செய்தும் அதை நீட்டித்து உதவி உள்ளீர்கள். தட்கல் விவசாய மின் இணைப்பு என்பது இன்றைக்கு விண்ணப்பித்தால் நாளைக்கே மின் இணைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகளாகிய நாங்களும், ரூ2.5 லட்சம்,3 லட்சம், என மின்சார வாரியத்துக்கு பணத்தை செலுத்தி, மின் இணைப்புக்காக ஏங்கிக் கொண்டுள்ளோம். ஆனால் தட்கல் விவசாய மின் இணைப்பு வழங்க மின்சார வாரியத்திற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யாதது, விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயம் செய்த குறுகிய காலத்தில், சுமார் ரூ600 கோடி மின்சார வாரியத்திற்கு வசூலான நிலையில், மின் இணைப்பு கிடைக்க கால தாமதம் ஆகும் என்ற நிலைப்பாடு விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் கையேடு அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் 2024-2025இல் தமிழகத்தில் விவசாயம் வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்று கொண்டிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஓராண்டில் மொத்த உற்பத்தி பொருள்கள் சேவைகள் ஆகியவற்றின் மதிப்பில் இருந்து அவற்றை உருவாக்குவதற்கான உழைப்பு மூலப் பொருள்களின் மதிப்பை கழித்து கூட்டப்பட்ட மொத்த மதிப்பு (Gross value added) கணக்கிடப்படுகிறது. இம்மதிப்புக்கும் முந்தைய ஆண்டுக்கான மதிப்புக்குமான வேறுபாடு தான் வளர்ச்சி என கணக்கிடப்படுகிறது.
தமிழகத்தில் 2021இல் 4.5 ஆக இருந்த விவசாய வளர்ச்சியானது அடுத்தடுத்த ஆண்டுகளில் 5.6%,2.5%,3.9% என ஏற்ற இறக்கங்களை கண்டது.2024 -2025 இல் -0.09% என எதிர்மறை வளர்ச்சியை அடைந்து விட்டது.விவசாயத் துறையில் சத்தமே இன்றி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதன் வெளிப்பாடு இது.இதே காலகட்டத்தில் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.69% என மே 2025 ல் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்ககத் துறை தெரிவித்தது.
எனவே தாங்கள் இந்நேர்வில் தனி கவனம் செலுத்தி தமிழகத்தில் விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கருத்தில் கொண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படவும், தட்கல் விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்து, தாமதம் இன்றி மின் இணைப்பு வழங்கிட வேண்டுகிறோம்.









