பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட களத்தில்,செவிலியர் ஒருவர், தனது குழந்தையுடன் உணவு அருந்தும் காட்சி காண்பவர்களை கலங்க செய்துள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் டிச.18 ம் தேதி உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்.போராட்டத்தை நிறுத்துவது தொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை துறை செயலாளர் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், இப்போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை பேருந்து நிலையத்தில் வைத்து இரவோடு, இரவாக போலீசார் கைது செய்தனர்.
இதனை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில், கொட்டும் பனியில் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, பணி நிரந்தரம் செய்யக் கோரி, கொட்டும் பனியிலும் விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட களத்தில்,செவிலியர் ஒருவர், தனது குழந்தையுடன் உணவு அருந்தும் காட்சி காண்பவர்களை கலங்க செய்துள்ளது.







