கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் 11-வது சாட்சியாக சேர்க்கபட்ட லாட்ஜ் உரிமையாளர் சாந்தாவை மிரட்டிய வழக்கில், சயான் மற்றும் வாளையாறு மனோஜ் விடுதலை செய்து மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் முதல் குற்றவாளியாக சயானும் இரண்டாவது குற்றவாளியாக வாளையாறு மனோஜ் உள்ளிட்ட பத்து பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொடநாடு பங்களாவில் கொள்ளை அடிப்பதற்கு முன் தினம், உதகையில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி திட்டம் தீட்டியது தெரியவந்ததை அடுத்து அந்த லாட்ஜி உரிமையாளர் சாந்தாவை காவல்துறையினர் 11-வது சாட்சியாக சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில் முதல் சாட்சியான சாந்தாவை வழக்கு விசாரணைக்கு வந்து சாட்சி அளிக்க கூடாது என்று சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு மிரட்டல் விடுப்பதாக கூறி உதகையில் உள்ள B1 காவல் நிலையத்தில், லாட்ஜ் உரிமையாளர் சாந்தா புகார் அளித்தார். அதனை அடுத்து சயான் மற்றும் வாளையார் மனோஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் குண்டர் சட்டம் போடப்பட்டது. இது குறித்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு முறையாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நீதிபதி சோழியா சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.








