ராட்சத பாதாள குடிநீர் குழாய் உடைப்பு : கோவையில் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது – சரி செய்ய வந்த ஜே.சி.பி எந்திரம் பள்ளத்தில் கவிழ்ந்ததால் பரபரப்பு !!!
கோவை, சக்தி சாலை சரவணம்பட்டி சந்திப்பில் சாலையின் கீழே உள்ள ராட்சத குடிநீர் குழாய் உடைந்து வெள்ளம் போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல லட்சம் லிட்டர் குடிநீர், அருகில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர் . ஒரு கட்டத்தில் அதனை சரி செய்ய கொண்டு வரப்பட்ட ஜே.சி.பி வாகனம், குழாய் உடைந்த பகுதியில் சரிந்து உள்ளே விழுந்ததால் அதனை மீட்க நீண்ட நேரம் போராடினர்.
சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் குடிநீர் வடிகால் துறை அதிகாரிகள் குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.இந்தப் பகுதி மாநகர பகுதிக்கு வரக் கூடிய பிரதான பகுதியாக இருப்பதால் சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் இருந்து வரக் கூடிய வாகனங்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலிலும் சிக்கின.ராட்சதக் குழாயை சரி செய்து முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கையும் விடுத்து உள்ளனர்.








