நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானத்தால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது ராணுவ ஒத்திகையா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், இன்று சிறிய ராக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தரையிறங்கியது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து, ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். அங்கிருந்த பொதுமக்கள், விமானத்தின் அருகே சென்று பார்த்தபோது, அதில் இரண்டு விமானிகள் இருந்துள்ளனர். அவர்களை உடனடியாக மீட்ட பொதுமக்கள், காயம் அடைந்த இருவரையும் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு வந்தனர். பொதுமக்கள் உதவியுடன், அந்த விமானத்தை சாலையிலிருந்து அப்புறப்படுத்தி ஓரமாக நிறுத்தினர். சிறிது நேரம் வாகன போக்குவரத்து தடைபட்டிருந்தது. தகவல் அறிந்த திருச்சி விமான நிலைய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த சிறிய ரக விமானம் சேலத்தில் இருந்து காரைக்குடி நோக்கி சென்றதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விமானத்தின் முன்புறம் சேதமடைந்து இருப்பதாகவும், இதனால் விபத்தை தவிர்க்க விமானி அவசரமாக தரையிறக்கியதும், முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.









