தனியார் தோட்டத்தில் புகுந்த காட்டு யானை கூட்டத்தில், இரண்டு ஆண் யானைகள் சண்டையிடும் காட்சிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. அதேபோல் யானைகள் வலசை போகும் மிக முக்கியமான வழித்தடமாக, கோவை வனப்பகுதி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் அடிக்கடி காட்டு யானைகள் உலா வருவது வழக்கம்.

தடாகம் அடுத்துள்ள வரபாளையம் மனோகர் தோட்டத்தில், இரவு குட்டியை அழைத்துக்கொண்டு ஏழு யானைகள் கூட்டமாக தோட்டத்திற்கு புகுந்தது. அங்கே இருந்த பயிர்களை உண்டது. இதற்கிடையே கூட்டத்தில் இருந்த இரண்டு ஆண் காட்டு யானைகளுக்குள், திடீரென சண்டை ஏற்பட்டது.
இதில் இரண்டு காட்டு யானைகளும் தந்தங்களால் கடுமையாக மோதிக்கொண்டன. இந்த வீடியோ காட்சிகள் மற்றும் யானைகளின் சத்தம் அங்கே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. சிறிது நேரம் சண்டையிட்ட பின்,ஒரு யானை அங்கிருந்து விலகி செல்ல,மற்றொரு யானை அதனை பின்னால் விரட்டி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.






