கோவை துடியலூர் அருகே உள்ள செங்காளி பாளையத்தை சேர்ந்தவர் 35 வயதான தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி காலையில் தனியார் நிறுவன ஊழியர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி மட்டும் தனியாக இருந்தார் .மாலையில் தனியார் நிறுவன ஊழியர் தனது வீட்டுக்கு வந்தபோது மனைவியை காணவில்லை உடனே அவர் அக்கம் பக்கத்தில் தேடினார். அங்கும் மனைவி கிடைக்கவில்லை. செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது மனைவி எடுத்து பேசவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன் மனைவியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். அங்கும் கிடைக்கவில்லை. இதனால் சோர்ந்து போன அவர் வீட்டுக்கு வந்து தனது அறைக்கு சென்றார். அப்போது மேஜையில் ஒரு கடிதம் இருந்தது. அதற்கு மேல் தாலியும் இருந்தது. அவரது மனைவி தாலியை கழட்டி வைத்துவிட்டு மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணம் ஆன 6 மாதத்தில் மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள். இதற்கிடையே அந்த பெண் எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- உங்களை எனக்கு பிடிக்கவில்லை. நமக்கு திருமணம் நடப்பதற்கு முன்பே நான் என் பெற்றோரிடம் உங்களை பிடிக்கவில்லை என்று சொன்னேன்.அதையும் மீறி என்னை உங்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். நான் முதல் இரவு அன்று உங்களை பிடிக்கவில்லை என்பதை கூறினேன். அதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. திருமணம் முடிந்த 6 மாதத்தில் நான் மகிழ்ச்சியாக வாழவில்லை. இந்த வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை. எனவே நீங்கள் கட்டிய தாலியை கழட்டி வைத்துவிட்டு நான் செல்கிறேன் என்னை தேட வேண்டாம். நீங்கள் வேறு திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தாலியை கழட்டி வைத்துவிட்டு புதுப்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
புதுப்பெண் மாயம் – உருக்கமான கடிதம் சிக்கியது.!!









