தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக விளங்கும் ஊட்டி கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
அதோடு அங்கு வரும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைகளால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனையடுத்து ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தினசரி எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.எம்.எம். நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.
இத்தகைய சூழலில் தான் இது தொடர்பான வழக்குகள் கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி (19.09.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த ஆய்வு தொடர்பாக ஐ.ஐ.டி. மற்றும் ஐ.எம்.எம். குழுவினர் சார்பில் நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஊட்டிக்குச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். அரசின் பொதுப் போக்குவரத்தைச் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். மேலும் இந்த ஆய்வு குறித்து வரும் டிசம்பர் மாதம் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஊட்டி, கொடைக்கானலில் ஈ – பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வால்பாறையில் குவிந்து வருகின்றனர்’ தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘ஊட்டி, கொடைக்கானல் போன்று வால்பாறை டாப்சிலிப், ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகியவை சுற்றுச்சூழல் ரீதியாகத் தீவிரமான பகுதிகள் ஆகும். எனவே வால்பாறைக்குச் செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச்சாவடிகள் அமைத்து ஈ – பாஸ் வழங்கும் நடைமுறையை வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி (01.11.2025) முதல் அமல்படுத்த வேண்டும். வால்பாறைக்கு வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்தும் சோதனை செய்ய வேண்டும். ஐ.ஐ.டி மற்றும் ஐ.எம்.எம் குழுவினருக்குத் தேவையான தகவல்களையும், ஆலோசனைகளைத் தமிழக அரசு வழங்க வேண்டும்.
இதற்கு ஏதுவாக தலைமைச் செயலர் தலைமையிலான கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும்’ என அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்நிலையில் நாளை மறுநாள் (01.11.2025 – சனிக்கிழமை) முதல் ஈ – பாஸ் கட்டாயம் தேவை என மாவட்ட ஆட்சியர் பவண்குமார் ஜி கிரியப்பனவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நவம்பர் 01 ஆம் தேதி முதல் வால்பாறைக்கு வரும் வாகனங்களுக்கு ஈ – பாஸ் வழங்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.
எனவே சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களுக்கு ஈ – பாஸ் பெற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அதோடு ஆழியாறு, சோலையார் சோதனை சாவடிகளிலும் ஈ – பாஸ் பெற முடியும். மேலும் ஈ – பாஸ் இல்லாத வாகனங்கள் வால்பாறைக்குள் அனுமதிக்கப்படாது. அதோடு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









