துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு..!

மேற்கு துருக்கியில் நேற்றிரவு 6.1 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக, ஏற்கனவே சேதமடைந்திருந்த குறைந்தது 3 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பலகேசிர் (Balikesir) மாகாணத்தில் உள்ள சிந்தர்கி (Sindirgi) என்ற நகரத்தில் சுமார் 5.99 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா அளித்த தகவலின்படி, சிந்தர்கியில் மக்கள் வசிக்காத 3 கட்டிடங்களும் ஒரு இரண்டு மாடிக் கடையும் இடிந்துள்ளன. இந்த 4 அமைப்புகளுமே, இதற்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலவீனமடைந்திருந்தவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் இஸ்தான்புல், பர்சா, மனிசா மற்றும் இஸ்மிர் உள்ளிட்ட அருகில் உள்ள பல மாகாணங்களில் உணரப்பட்டது. அதைத் தொடர்ந்து பல பின் அதிர்வுகளும் ஏற்பட்டன. பலகேசிர் மாகாண ஆளுநர் இஸ்மாயில் உஸ்தாவோக்லு அளித்த தகவலின்படி, நிலநடுக்கத்தின்போது ஏற்பட்ட பீதியினால் தடுமாறி விழுந்ததால் 22 பேர் காயம் அடைந்துள்ளனர். இதுவரை உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. நாங்கள் தொடர்ந்து நிலைமையை மதிப்பிட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் அதிர்வுகள் ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, அப்பகுதி மக்கள் பலர் இரவைக் கட்டிடங்களுக்கு வெளியே கழித்தனர். இந்நிலையில், மழை பெய்யத் தொடங்கியதால், உள்ளூர் அதிகாரிகள் பள்ளிகள், மசூதிகள் மற்றும் விளையாட்டு அரங்குகளைத் திறந்து, தங்கள் வீடுகளுக்குத் திரும்ப விரும்பாதவர்களுக்கு தங்குமிடம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதே சிந்தர்கி நகரம் கடந்த ஆகஸ்ட் மாதம் இதே 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. அதில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் காயமடைந்தனர். அப்போதிருந்து பலகேசிர் பிராந்தியம் சிறிய அளவில் தொடர்ந்து பின் அதிர்வுகளைச் சந்தித்து வருகிறது.

துருக்கி பல முக்கிய பூகம்பப் பிளவு கோடுகளில் அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுவது வாடிக்கை. கடந்த 2023 ஆம் ஆண்டில், 7.8 ரிக்டர் அளவிலான பேரழிவு தரும் நிலநடுக்கம் தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவைத் தாக்கி, 59,000-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்டதுடன், லட்சக்கணக்கான கட்டிடங்களை அழித்தது குறிப்பிடத்தக்கது.