புதுடெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமான வழியில் நுழைந்த ஹரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்களை அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி உள்ளது.
இதுகுறித்து கர்னல் மாவட்ட டிஎஸ்பி சந்தீப் குமார் கூறியதாவது: அமெரிக்காவில் உரிய விசா அனுமதி இல்லாமல் சட்டவிரோதமான வழிமுறையில் குடியேறிய ஹரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்களை அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி உள்ளது.
இதில் 16 பேர் ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கைதாலைச் சேர்ந்த 15 பேர், அம்பாலா 5, யமுனா நகர் 4, குருஷேத்ரா 4, ஜிந்த் 3, சோனிபட் 2, பஞ்ச்குலா, பானிபட், ரோத்தக், பதேஹாபாத்தைச் சேர்ந்த தலா ஒருவரும் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் அடங்குவர்.
டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அந்த 54 பேரும் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை சட்டவிரோதமான வழியில் (டாங்கி ரூட்) அமெரிக்காவுக்கு கூட்டிச் சென்ற முகவர்கள் யார் என்பது குறித்து இதுவரை எவரும் புகார் அளிக்கவில்லை.
இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் யார் மீதாவது குற்றப்பதிவு இருந்தால் விசாரணையின்போது அது வெளிச்சத்துக்கு வரும். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





