சொல்வது எல்லாம் பொய்… டிரம்பிடம் மோடி பேசவே இல்லை… மத்திய அரசு விளக்கம்.!!

வாஷிங்டன்: ”ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை விரைவில் நிறுத்துவதாக பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளார்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கூறினார்.

ரஷ்யாவும், இந்தியாவும் நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் நிலையில் டிரம்பின் இந்த கருத்து சர்வதேச அரசியலில் பேசும் பொருளானது. இந்நிலையில் தான் மத்திய வெளியுறவுத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் டிரம்ப் பொய்யை அம்பலப்படுத்தி அவரது மூக்கு உடைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அவ்வப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது அவர் கூறும் தகவல்கள் பெரும் கவனம் பெறும். அந்த வகையில் தான் இன்று வெள்ளை மாளிகையில் டிரம்ப் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்குவது பற்றி கருத்து தெரிவித்தார். ரஷ்யாவும், நம் நாடும் நெருங்கிய நட்பு நாடாக உள்ள நிலையில் அதில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் அவரது கருத்து இருந்தது.

இதுபற்றி டொனால்ட் டிரம்ப் கூறியதாவது: ”பிரதமர் மோடியுடன் எனக்கு சிறந்த உறவு இருக்கிறது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என அவர் உறுதியளித்துள்ளார். இந்தியாவால் அதை உடனடியாக செய்ய முடியாது என்று பிரதமர் மோடி தன்னிடம் கூறினார். ஆனால் இந்த செயல்முறை விரைவில் முடிவடையும்.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சாஎண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சி அடையவில்லை. அதேபோல் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவையும் அதே காரியத்தை செய்ய வைப்பேன். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் இருந்து நான் ஒன்றை மட்டும் தான் விரும்புகிறேன். அவர் போரை நிறுத்த வேண்டும். உக்ரைன் மக்களை கொல்வதை நிறுத்த வேண்டும்.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கவில்லை என்றால் போர் நிறுத்தம் எளிதாகும். இந்தியாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் மறைமுகமாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அதிகரிக்கிறது. தொடர்ச்சியான வர்த்தகம் பல மக்களை இழந்த இந்த அபத்தமான போரை ரஷ்யா தொடர அனுமதிக்கிறது” என்றார்.

டிரம்பின் இந்த கருத்தை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை சார்பில், ”அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் போனில் பேசிக்கொள்ளவே இல்லை. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இன்றியமையாதது. தேச நலனை கருத்தில் கொண்டு நாங்கள் முடிவுகளை எடுக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்தார். அதில் 25 சதவீதம் என்பது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் விதிக்கப்பட்டது. ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் மீதான போரை தொடர உதவி வருகிறது. இதனால் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று டிரம்ப் தொடர்ந்து கூறினார். ஆனால் நம் நாடு டிரம்பை மதிக்கவில்லை. அவரது பேச்சுக்கு செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.

நம் நாட்டின் கச்சா எண்ணெய் பயன்பாட்டில் 36 சதவீதம் முதல் 38 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து தான் கிடைக்கிறது. இதனால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் அது நம் நாட்டுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி ரஷ்யாவுக்கு பதில் நம் நாடு மாற்று மார்க்கெட்டை தேட வேண்டி இருக்கும். இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கு டிமாண்ட் அதிகரித்து விலை கிடுகிடுவென அதிகரிக்கும்.

இதனால் டிரம்ப் எவ்வளவு தான் மிரட்டினாலும் நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாது என்கின்றனர் சர்வதேச நோக்கர்கள். இதனை இந்தியாவும் உறுதி செய்துள்ளது. நம் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்து விட்டது. ஆனால் இந்தியா – ரஷ்யா உறவை சிதைக்க விரும்பும் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து விரைவில் கச்சா எண்ணெயை வாங்குவதாக பிரதமர் மோடி கூறியுள்ளதாக கூறினார். இது பொய் என்று மத்திய வெளியுறவுத்துறை விளக்கமளித்து டிரம்பின் பித்தலாட்டத்தை அம்பலமாக்கி உள்ளது.