சட்டசபைக்கு “கிட்னிகள் ஜாக்கிரதை” ஸ்டிக்கருடன் வந்த அதிமுகவினர்.!!

சென்னை: சட்டசபை கூட்டத்தின் 3வது நாள் தொடங்கியுள்ள நிலையில், கிட்னிகள் ஜாக்கிரதை என்று சட்டையில் ஸ்டிக்கர் அணிந்து அதிமுக எம்எல்ஏ-க்கள் வந்திருக்கின்றனர்.

இதனால் இன்றைய நாளில் கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய விசைத்தறி தொழிலாளர்களை குறித்து கிட்னி திருட்டு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசைத்தறி தொழிலாளர்களின் ஏழ்மையை பயன்படுத்தி கிட்னியை பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதுதொடர்பாக அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தன.

இதையடுத்து கிட்னி திருட்டு விவகாரத்தை விசாரிக்க உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தலையிட முடியாது என்றும், சிறப்பு குழு விசாரணைக்கு தடையில்லை என்றும் உத்தரவிட்டது.

ஆனால் இதுவரை சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கிறது. கரூர் விவகாரத்தில் தமிழக அரசு காட்டிய வேகம், கிட்னி திருட்டு விவகாரத்தில் காட்டாதது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் சட்டசபைக் கூட்டத் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

நேற்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக கார சார விவாதம் நடைபெற்றது. அதிமுகவினர் சட்டசபையில் தர்ணா செய்யும் அளவிற்கு சூழல் சென்றது. இதன்பின் வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இந்த நிலையில் சட்டசபைக் கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் 3வது நாள் சட்டசபைக் கூட்டத்திற்கு அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் “கிட்னிகள் ஜாக்கிரதை” என்ற அடைமொழியுடன் கூடிய ஸ்டிக்கரை அணிந்து வந்துள்ளனர். இதனால் இன்று கிட்னி திருட்டு விவகாரத்தை அதிமுக திட்டமிட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.