என்னது!! அப்படியா!! இனி கண்ணாடியில் பார்த்தாலே பணம் அனுப்ப முடியுமாம்..!!

சென்னை: கண்ணாடியை திருப்புனா வண்டி எப்படி ஓடும் என்ற காமெடியை நாம் அனைவரும் பார்த்து இருப்போம். ஆனால், சீக்கிரமே கண்ணாடியில் பார்த்தால் பணம் அனுப்பும் வசதி வரவுள்ளது.

இதில் செல்போன், பின் நம்பர் என எதுவும் தேவையில்லையாம். வெறுமன கண்ணாடியை அணிந்து கொண்டு பார்த்தாலே பணம் அனுப்ப முடியுமாம். இது என்ன புதிய வசதி.. இது எப்படிச் செயல்படும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இந்தக் காலத்தில் நம்மில் பெரும்பாலானோர் யுபிஐ மூலமாகவே பணம் அனுப்புகிறோம். சில்லறை பிரச்சனை உள்ளிட்ட பல சிக்கல்களைத் தவிர்க்க யுபிஐ உதவுகிறது. இதனால் யுபிஐ பேமெண்டுகளில் பல புதிய வசதிகளும் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பிரபலக் கண்ணாடி நிறுவனமான லென்ஸ்கார்ட் இதை வேறு ஒரு லெவலுக்கே எடுத்துச் செல்லவுள்ளது.

அந்த நிறுவனம் விரைவில் ஒரு புதிய ஸ்மார்ட் கண்ணாடிகளை வெளியிட உள்ளதாம். அந்தக் கண்ணாடிகள் மூலம் நேரடியாக க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து யுபிஐ பணப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும் என்று லென்ஸ்கார்ட் அறிவித்துள்ளது. இதற்கு மொபைல் போன் அல்லது பின் நம்பர் தேவையில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.

லென்ஸ்கார்ட்டின் ‘B கேமரா’ ஸ்மார்ட் கண்ணாடிகளில் பாயின்ட்-ஆஃப்-வியூ (POV) கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் இடம்பெறும். இதன் மூலம் ஒருவர் பணப் பரிவர்த்தனைகளை மிக எளிதாக மேற்கொள்ள முடியும் என லென்ஸ்கார்ட் கூறுகிறது. இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளில் யுபிஐ பாதுகாப்பாக ஒருங்கிணைக்கப்படுகிறது. இதனால் பயனரின் வங்கிக் கணக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

இது தொடர்பாக லென்ஸ்கார்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இது பணத்தை அனுப்ப மிகப் பெரியளவில் உதவும். ஒரு பொருளை வாங்கும்போது மொபைலை எடுக்க அல்லது பின் நம்பரை பதிவிடும் தேவை இருக்காது. என்பிசிஐ-ன் யுபிஐ சர்க்கிள் அம்சம், கண்ணாடிகளை நேரடியாக வங்கிக் கணக்குடன் இணைக்க உதவுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது நீங்கள் ஒரு கடைக்குச் செல்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அங்குத் தேவையான பொருட்களை வாங்குகிறீர்கள். பிறகு கட்டணம் செலுத்த க்யூ.ஆர் கோடை கேட்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். வழக்கமாக நீங்கள் செல்போனை எடுத்து எதாவது ஒரு யுபிஐ செயலி மூலம் பணம் அனுப்புவீர்கள். ஆனால், அதற்குப் பதிலாக நேரடியாக உங்கள் கண்ணாடி மூலமாகவே பணம் அனுப்பலாம். அதற்கு நீங்கள் அந்த க்யூ.ஆர் கோடை பார்த்தாலே போதும். கண்ணாடியில் இருக்கும் கேமரா, அந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்துவிடும்.

அட சும்மா க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தாலே பணம் போய்விடுமா என்று பலருக்கும் சந்தேகம் வரும். ஆனால், அப்படி இல்லையாம்.. நீங்கள் வாய்ஸ் கமெண்ட், அதாவது குரல் மூலம் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக லென்ஸ்கார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி பியுஷ் பன்சல் இது குறித்துக் கூறுகையில், “வரும் காலத்தில் இதுபோன்ற ஸ்மார்ட் கண்ணாடிகளின் யூஸ் நமது வாழ்வில் தொடர்ந்து அதிகரிக்கும். பணப் பரிவர்த்தனைகள் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாகும். ஸ்மார்ட் கண்ணாடிகளின் கேமரா மூலம் பணம் செலுத்தும் வசதி நிச்சயம் ஒரு மிக பெரிய கேம் சேஞ்சராக இருக்கும்” என்று அவர் கூறினார்.