கோவை பேரூர் தீத்திபாளையம் அருகே பெருமாள் மலை உள்ளது .இந்த மலை மீது பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் .அதன்படி நேற்று முன்தினம் இந்த கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பிற்பகல் 12 மணிக்கு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட பக்தர்கள் கோவிலை ஒட்டி இருக்கும் அன்னதான மண்டபத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மலை பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மலை தேனீக்கள் கூட்டமாக பறந்து வந்தன . அவைகள் திடீரென்று மண்டபத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த பக்தர்களை சரமாரியாக கொட்டத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கூச்சலிட்டனர் .மேலும் சிலர் தேனீக்களிடமிருந்து தப்பிக்க அங்கும், இங்குமாக ஓடத் தொடங்கினார்கள். மலைத்தேனிகள் பக்தர்கள் விரட்டி, விரட்டி கொட்டியது. இதனால் 50 மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தீத்திபாளையத்தைச் சேர்ந்த கண்ணியம்மாள் ( வயது 55) அவரது மகன் பாக்யராஜ் ( வயது 42) பெருமாள் சாமி (வயது 45) செல்லப்ப கவுண்டன் புதூர் லோகநாதன் ( வயது 50 ) ஆகியோர் மயக்கம் அடைந்தனர். அவர்களை கோவில் ஊழியர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதை தொடர்ந்து கோவில் ஊழியர்கள் அந்த பகுதியில் புகை மூட்டம் போட்டனர். இதனால் கோவிலில் இருந்து பல தேனீக்கள் அங்கிருந்து பறந்து சென்றன. இதையடுத்து பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்..
பெருமாள் கோவிலில் மலை தேனீக்கள் கொட்டி 50 பக்தர்கள் படுகாயம்..
