கரூர் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் புகார்!

41 உயிர்களை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் தவெக உள்ளிட்ட தரப்புகள் சார்பில் 5 மனுக்கள் தொடரப்பட்டுள்ளது.

இந்த 5 மனுக்களும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி, என்.வி அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.. அப்போது தவெக தரப்பு மாநில அரசின் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டது.

கரூர் கூட்ட நெரிசலில் மகனை இழந்த தந்தை ஒருவர் சிபிஐ விசாரணை கோரிய மனு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.. அப்போது மனுதாரர் தரப்பு, கரூர் கூட்டத்தில் ரவுடிகள் புகுந்ததாலும் காவல்துறையினர் தடியடி நடத்தியதாலும் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.. கரூரில் செருப்பு வீசப்பட்டது, அப்போது கூட கூட்ட நெரிசல் ஏற்படவில்லை.. ஆனால் காவல்துறை தடியடி நடத்திய பின்னர் தான் பலர் ஓடினர். அதனால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது..

கரூரில் கூட்ட நெரிசல் ஏற்படப் போகிறது என்று மதியம் 3.15 மணிக்கே திமுக உறுப்பினர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். பதிவு போட்டவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்.. எனவே மாநில அரசு அதிகாரிகளின் விசாரணையில் நம்பிக்கை இல்லை.. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அப்போது மாநில அரசின் காவல்துறைக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளதாலேயே வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அரிய வழக்குகளை மட்டுமே சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றமே சொல்லி உள்ளது என்று தமிழக அரசு தரப்பு வாதிட்டது.. சிறப்பு விசாரணைக் குழு அதிகாரியை தமிழக அரசு நியமிக்கவில்லை.. உயர்நீதிமன்றம் தான் நியமித்தது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது..