காட்டெருமை பார்த்து பயந்து கீழே விழுந்து பெண் படுகாயம் – தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவலம்.!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதியில் பத்துக்கு மேற்பட்ட ஆதிவாசி பழங்குடியின கிராமங்கள் உள்ளன. அடர்ந்த வனப் பகுதியில் வாழும் இவர்களுக்கு சாலை வசதி இல்லாமல், மின் வசதி இல்லாமலும், குடிநீர் வசதி இன்றி வனப்பகுதிக்குள், வன விலங்குகள் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

வால்பாறை அருகே சேக்கல்முடி பகுதி பாலகினார் ஆதிவாசி பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

நேற்று இரவு தங்கம்மாள் (45)என்ற பெண், வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது, காட்டு எருமை அவரை தாக்க வந்துள்ளது . தங்கம்மாள் பயந்து கீழே விழுந்தில், பலத்த காயமடைந்தார். இரவு நேரம் என்பதாலும், சாலை வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இயலாத சூழ்நிலையில், இரவு நேரத்தில் வீட்டில் வைத்து காத்திருந்தனர்.

பகல் நேரத்தில் பாலக்கினாறு செட்டில்மெண்ட் பகுதியிலிருந்து, சேக்கல்முடி பகுதிக்கு 5 கிலோ மீட்டர் தொலைவு, வரை தங்கமாளை தொட்டில் கட்டி சுமந்து வந்தனர். சேக்கல் முடி பகுதியில் இருந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்னும் வனப்பகுதியில் சாலை வசதி இல்லாததால், அங்கு வாழும் மக்கள் அவசர உதவிக்கு முருத்துவ தேவைக்கு கூட செல்ல முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.