முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில், அடுத்தவர் முதுகில் சவாரி செய்வதில் பழகிய பாஜக, பிறர் ரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி கட்சி.
கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள் என கடுமையான சொற்களை பயன்படுத்தியிருந்தார். இதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “இந்த பதிவின் ஒவ்வொரு வார்த்தையிலும் முதலமைச்சரின் பதற்றம் வெளிப்படுகிறது என்று கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும், திமுக கூட்டணி வலிமையாக உள்ளது, 200 இடங்களில் வெல்வோம் என தொடர்ந்து கூறிவந்த ஸ்டாலின், கடந்த சில நாட்களாக ஏன் இவ்வளவு பதட்டத்துடன் கருத்து தெரிவிக்கிறார்? இது அவரின் மனநிலையை வெளிப்படுத்துகிறது என விமர்சித்தார்.
திமுகவின் தேர்தல் வரலாறும் வானதி சீனிவாசனின் பேச்சில் இடம் பெற்றது. 1957 முதல் இன்று வரை திமுக ஒருபோதும் தனித்து போட்டியிடவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். 1967ல் திமுக, தன்னுடன் முற்றிலும் எதிரான சித்தாந்தம் கொண்ட மூதறிஞர் ராஜாஜியுடன் கூட்டணி அமைத்தே ஆட்சியைப் பிடித்தது. 1971ல் காங்கிரஸ் பிளவுபட்டதாலும், 1989ல் அ.தி.மு.க., பிளவுபட்டதாலும், 1996ல் காங்கிரஸ் பிளவுபட்டதாலும், ரஜினிகாந்தின் ஆதரவாலும், 2006ல் விஜயகாந்த் வாக்குகள் பிரிந்ததாலும், 2021ல் எதிர்க்கட்சிகள் பிரிந்ததாலும் தான் திமுக வெற்றி பெற்றது. ஒரு தேர்தலிலும் தன் சொந்த வலிமையால் வெற்றி பெற்றதில்லை என்பது திமுகவின் உண்மை வரலாறு என வானதி குற்றம்சாட்டினார்.
இதற்கு மாறாக பாஜகவின் வளர்ச்சியை அவர் எடுத்துரைத்தார். 1996-ஆம் ஆண்டிலேயே பாஜக தனித்துப் போட்டியிட்டு சட்டமன்றத்தில் நுழைந்தது. 2014 மக்களவைத் தேர்தலில் இரண்டு பெரிய கட்சிகள் இல்லாமலிருந்த போதும், பாஜக கூட்டணி இரண்டு எம்.பி.க்களைப் பெற்றது. அதே நேரத்தில் திமுகவுக்கு கிடைத்தது பூஜ்யம். இந்த வரலாற்றை பார்த்தால், திமுகவின் பாஜக மீதான விமர்சனங்கள் வெறும் நகைப்புக்குரியவை என்றார்.
மேலும் அவர் குறிப்பிட்டதாவது: “அதிகாரத்தைப் பயன்படுத்தி யாரையும் கட்டுப்பாட்டில் வைக்கும் வழக்கு பாஜகவுக்கு இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. ஆனால் அ.தி.மு.க-பாஜக கூட்டணி வலுவடைந்ததும், தோல்வி பயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பாஜக மீது கடுமையான வார்த்தைகளை வீச ஆரம்பித்துள்ளார். இந்த கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வலிமை பெற்று விடுமோ என்ற அச்சமே ஸ்டாலினின் பேச்சில் தெரிகிறது” என வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.