கோவை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடந்த 2 – ந் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த நாளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினார்கள் .இதில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 37 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 937 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் விடுமுறை தினமான காந்தி ஜெயந்திக்கு முந்தைய நாளில் டாஸ்மாக் கடையில் இருந்து அதிக அளவில் மது பாட்டில் வாங்கிச் சென்று தனியா பார்களில் பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பேரூரில் 4 மதுபான பார்களிலும் கருமத்தம்பட்டியில் 3 பார்களிலும், பெரியநாயக்கன்பாளையம் ,வால்பாறை மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு மதுபான பார்களிலும் என மொத்தம் 10 தனியார் மதுபான பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- தற்போது சீல் வைக்கப்பட்ட 10 பார்களில் அளவுக்கு அதிகமாக மது பாட்டில்களை வாங்கி வைத்து விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி அன்று சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். எனவே வருவாய் துறை அதிகாரிகளுடன் இணைந்து ,அந்த பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்றனர்.