தமிழன்டா!! “Google”க்கு சவால் விடும் தமிழர் கண்டுபிடித்த “Comet”… கேட்கும் முன்பே எல்லா தகவலையும் கொடுக்கும் சூப்பர் பிரவுசர்..!!

சென்னை: இப்போது ஏஐ துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் தங்கள் மார்கெட்டை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையே கூகுள் உள்ளிட்ட பெரு நிறுவனங்களைக் காலி செய்யும் வகையில் முக்கிய நடவடிக்கையை இந்தியருக்குச் சொந்தமான பெர்ப்லெக்ஸிடி ஏஐ எடுத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ஏஐ இந்தக் காலத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ ஆதிக்கம் மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு முக்கிய நிறுவனங்களும் தங்கள் மார்கெட்டை பிடிக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தப் போட்டியில் பல்வேறு ஏஐ நிறுவனங்கள் உள்ளன.

அப்படி ஏஐ துறையில் மிக முக்கியமான நிறுவனமாக பெர்ப்லெக்ஸிடி ஏஐ இருக்கிறது. ஏஐ சந்தையில் கணிசமான மார்கெட்டை பெர்ப்லெக்ஸிடி தன் வசம் வைத்திருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த பெர்ப்லெக்ஸிடியை உருவாக்கிய அரவிந்த் ஸ்ரீனிவாஸ் ஒரு இந்தியர் ஆவார். அதிலும் சென்னையில் பிறந்தவர்..! மிக வேகமாக வளர்ந்து வரும் ஏஐ நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் பெர்ப்லெக்ஸிடி இப்போது முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அதாவது ஏஐ அடிப்படையில் இயங்கும் அந்த நிறுவனத்தின் கோமட் (Comet) பிரவுசர் இனி ஆப்பிள் மற்றும் விண்டோஸ் யூசர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. கோமட் என்பது கூகுள் க்ரோம் போல ஒரு பிரவுசர் ஆகும். இதற்கு முன்பு வரை பெர்ப்லெக்ஸிடி மேக்ஸ் சந்தா கட்டும் நபர்களுக்கு மட்டுமே கோமட் வழங்கப்பட்டது. அதை மாற்றி தான் இப்போது அனைவருமே இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குரோம், ஃபயர்பாக்ஸ் என ஏற்கனவே ஏகப்பட்ட பிரவுசர்கள் இருந்தாலும் அதில் இருந்து கோமட் தனித்து நிற்கிறது. மற்ற பிரவுசர்களில் டேப்கள் இருக்கும் சூழலில், கோமட் பிரவுசரில் யூசர்கள் தேடும் அனைத்துத் தகவல்களும் விரைவாக அணுகும் வகையில் ஒர்க்ஸ்பேஸ் (workspace) போன்ற செட்அப் ஏற்படுத்தப்பட்டுள்ளது.. கடந்த சில மாதங்களில் மட்டும் பல லட்சம் பேர் இந்த பிரவுசரை பயன்படுத்த வெயிட்லிஸ்டில் சேர்ந்துள்ளனர்.

கோமட்டின் முக்கிய அம்சமே அதில் இருக்கும் கோமட் அசிஸ்டெண்ட் (Comet Assistant) தான். இது கிட்டத்தட்ட எட்ஜ் பிரவுசரில் இருக்கும் கோபைலட் (Copilot) போன்ற ஒரு AI உதவியாளர் ஆகும். ஒரு குறிப்பிட்ட இணையப் பக்கம் அல்லது இணையதளம் குறித்து நாம் இதில் கேள்விகளைக் கேட்கலாம்.. அல்லது குறிப்பிட்ட பக்கத்தில் இருக்கும் கண்டெண்டுகளை சுருக்கமாகச் சொல்லவும் கேட்கலாம்.

மேலும், யூசர் ஒரு விஷயத்தைத் தேடிப் பார்க்கிறார்.. குறிப்பிட்ட டாபிக்களில் விஷயங்கள் பற்றிப் படிக்கிறார் என்றால் கோமட் அதையெல்லாம் கண்காணிக்கும்.. கோமட் ஏஐ இதுபோல யூசர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து அது தொடர்பான கூடுதல் தகவல்களைப் பரிந்துரைக்கும். மேலும், பயன்படுத்தப்படாத டேப்களை தானாக மூடிவிடும். மேலும், மீண்டும் கோமட் பிரவுசரை ஓபன் செய்யும்போது முந்தைய பணிகள் குறித்தும் அது நினைவூட்டும்.

யூசர்களுக்கு உதவும் வகையில் ஒரு எளிமையான இன்டர்பேஸை கோமட் வைத்திருக்கிறது. மேலும், ஒவ்வொரு புதிய டேபிலும் கோமட் அசிஸ்டெண்ட் தனித்தனியாக இருக்கும். இதன் மூலம் யூசர்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு கேள்விகளைக் கேட்க முடியும். டிஸ்கவர் போன்ற ஃபீட்களையும் கோமட் யூசர்கள் பயன்படுத்தலாம். இது ஒவ்வொரு யூசருக்கும் ஏற்ற செய்திகளைப் பரிந்துரைக்கும்

மேலும், ஈஸியாக ஷாப்பிங் செய்ய ஷாப்பிங் அசிஸ்டெண்ட் (Shopping assistant) தனியாக இருக்கிறது. இதன் மூலம் பல்வேறு இணையதளங்களிலும் ஒப்பீடு செய்து சலுகை விலையில் பொருட்களை வாங்கலாம். டிராவல், விண்வெளி, நிதி மற்றும் விளையாட்டு (Sports) என ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இதில் இருக்கிறது. அதேநேரம் இந்த அனைத்து வசதிகளும் இலவசம் இல்லை. சிலவற்றைப் பயன்படுத்தத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.