துர்காதேவி தேவி சிலைகளை கரைக்கும் போது நடந்த சோகம்…10 குழந்தைகள் உட்பட 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..

மத்தியப் பிரதேசத்தில் துர்கா தேவி சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வின்போது 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகேயுள்ள இங்கோரியா பகுதியில், பக்தர்கள் துர்கா சிலையை டிராக்டரில் ஏற்றி சம்பல் ஆற்றை நோக்கிச் சென்றனர். அப்போது, 12 வயது சிறுவன் தவறுதலாக டிராக்டரை இயக்கியதால், அது பாலத்தின் தடுப்புகளை உடைத்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இதனால் 12 குழந்தைகள் நீரில் விழுந்தனர். கிராம மக்கள் 11 குழந்தைகளை உடனே மீட்டனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி 2 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் ஒரு குழந்தை இன்னும் காணவில்லை. டிராக்டர் கிரேனின் உதவியால் மீட்கப்பட்டது. காணாமல் போன சிறுவனைத் தேடும் பணியில் காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மற்றொரு துயர சம்பவம் காண்ட்வா மாவட்டத்தின் பாந்தனா வட்டத்தில் நடந்தது. அர்ட்லா மற்றும் ஜாம்லி கிராமங்களைச் சேர்ந்த 25 பேர் டிராக்டரில் சிலையை ஏற்றி சென்றபோது, டிராக்டர் குளத்தில் கவிழ்ந்தது. இதில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் 8 பேர் பெண் குழந்தைகள் ஆவர். மேலும் பலர் இன்னும் காணாமல் போயுள்ளனர். டிராக்டரில் அதிகப்படியானோர் பயணம் செய்ததே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் உடனடியாகச் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய துர்கா தேவியை வேண்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டு சம்பவங்களிலும் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது சம்பவத்தின் துயரத்தை மேலும் அதிகரித்துள்ளது.