சென்னை: சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் லஞ்சம் கொடுக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதாகவும் இதனால் பிஸ்னஸ் செய்யவே முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பிரபல லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது..
இதனால் இந்தியாவில் தங்கள் ஆபரேஷன்களை நிறுத்திக் கொள்வதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் இயங்கி வந்த லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான வின்ட்ராக் இன்க் என்ற நிறுவனம் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளப் போவதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ஏற்றுமதி இறக்குமதி என ஆபரேஷன்களை மொத்தமாக நிறுத்திக் கொள்ளப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 45 நாட்களாக சென்னை சுங்கத்துறையால் தங்களுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இரண்டு முறை லஞ்சப் புகார்களை அம்பலப்படுத்தியதால், அதிகாரிகள் பழிவாங்கத் தொடங்கியதாகவும், இதனால் இந்தியாவில் தங்கள் பிஸ்னஸ் முற்றிலும் முடங்கி அழிந்துவிட்டது என்றும் வின்ட்ராக் இன்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்கள் மேலும், “இந்தியாவில் பிஸ்னஸ் செய்வது எளிதல்ல.. ஒவ்வொரு நிர்வாக மட்டத்திலும் ஊழல் நிறைந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளது.
வின்ட்ராக் இன்க் நிறுவனர் பிரவீன் கணேசனும் தனது ட்விட்டரில் சுங்கத்துறை அதிகாரிகளை விமர்சித்துள்ளார். சில அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்ட அவர், 6,993 அமெரிக்க டாலர் மதிப்புள்ள சரக்குகளை விடுவிக்க அவர்கள் ₹2.1 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் குற்றம் சாட்டினார். லஞ்சம் கொடுத்தால் தான் சரக்குகளை விடுவோம் எனக் கட்டாயப்படுத்தியதாகவும் லஞ்சம் குறித்து பேச்சுவார்த்தையின்போது அதிகாரிகள் 10% தள்ளுபடி கூட வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லஞ்சப் புகார் ஒரு நிறுவனமே இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது இணையத்தில் டிரெண்டாகியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினும் இதைக் கண்டித்து வருகிறார்கள். இது உண்மையாகக் கவலையளிப்பதாகக் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தனது ட்விட்டரில், “இது மிகவும் வருந்தத்தக்கது. நாடு முழுக்க கட்டமைப்பிலேயே ஊழல் ஒரு பகுதியாக மாறிவிட்டது. பெரும்பாலான நிறுவனங்கள் பிஸ்னஸின் ஒரு பகுதியாக ஊழலைக் கருதி ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டன. ஆனால், அது இப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. நாடு வளர்ச்சியடைந்து செழிக்க வேண்டுமென்றால் இத்தகைய போக்கை மாற்ற வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.
ஆரின் கேப்பிட்டல் தலைவர் மற்றும் இன்ஃபோசிஸின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான மோகன்தாஸ் பாய், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை டேக் செய்து, “நம் துறைமுகங்களில் உள்ள ஊழலை ஒழிக்கத் தவறிவிட்டீர்கள். தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள்” என்று பதிவிட்டார்.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசின் கீழ் இயங்கும் சுங்கத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாகத் தங்கள் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரவீனின் நிறுவனம் பொருட்களைத் தவறாக வகைப்படுத்தியதாகவும், யு.எஸ்.பி. சார்ஜிங் கேபிள்களை அறிவிக்காமல் இறக்குமதி செய்ததாகவும், பேட்டரி கழிவு மேலாண்மை விதிகள் 2022-ன் கீழ் கட்டாயப்படுத்தப்பட்ட EPR (Extended Producer Responsibility) சான்றிதழை வழங்கத் தவறியதாகவும் சுங்கத்துறை தெரிவித்தது.
இது தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரம் லஞ்சம் எதுவும் வாங்கப்படவில்லை என்றும் சுங்கத்துறை உறுதிப்படுத்தியது. மேலும், இறக்குமதி நிறுவனங்கள் விதிகளை மீறும்போதெல்லாம் இதுபோன்ற பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறுவதாகச் சுங்கத்துறை கூறியுள்ளது..